செவ்வாய், 20 ஏப்ரல், 2010

சுவையானது!

ஸென் குரு தாஜி (1889 - 1953 ) சாகும் தருவாயில் இருந்தார். அவருடைய சீடர்கள் அனைவரும் அவருடைய படுக்கை மெத்தையைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். அதில் ஒரு சீடன் குருவின் மிகவும் விருப்பமான ஒரு குறிப்பிட்ட வகையான அரிதில் கிடைக்கும் கேக் ஒன்றினைத் தேடி, கடை கடையாக ஏறி இறங்கி அரை நாள் செலவழித்து டோக்கியோவில் இருந்து வாங்கி வந்தான்.

வெளிறிய கண்களுடன் இருந்த குரு, கேக்கினைப் பார்த்து புன்னகையை வரவழைத்துக் கொண்டு வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக நம்நம் என்று சத்ததுடன் சாப்பிட ஆரம்பித்தார்.

நிர்வாணம் (முக்தியை/சாவை) அடையும் தருவாயில் இருக்கும் ஸென் குருக்களிடம் அவர்களுடைய கடைசி வார்த்தை என்ன என்றுக் கேட்டு எழுதி வாங்கி வைத்துக் கொள்வது வழக்கம்.

கொஞ்ச நேரத்தில் களைப் படைந்து, கண்கள் சொருகும் நிலையில் இருந்த அவரிடம் சீடர்கள், "ஏதேனும் கடைசி அறிவுரை (அ) வார்த்தைகள் இருக்கிறதா?" எனக் கேட்டனர்.

"ஆமாம்" என்றார் குரு தாஜி. சீடன் மிகவும் முன்னே வந்து கவனமாக அவருடைய அருகில் குனிந்து ஒரு வார்த்தையைக் கூட தவற விடாமல் கேட்டு எழுதுவதற்கு ஆயத்தமானான்.

"சொல்லுங்கள், குருவே" என்றான் சீடன்.

"என்னுடைய..., ஆனால் இந்தக் கேக் மிகவும் சுவையானது!" என்று கூறியவாரே, மறைந்து போனார்.

தவிப்பதற்காகவே.

ஒரு ஸென் மடத்தின் இளைய துறவி, தனது மடத்தின் தலைமை குரு செய்த செயலைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான். தலைமை குரு செய்த செயலைப் பார்த்தும் அவரிடம் நேரடியாக எதுவும் கேட்க மனம் இல்லாமல் அங்கிருந்து மௌனமாக சென்றான். பின்பு பொருக்க முடியாமல், தன்னுடைய நண்பர்களிடம் குரு செய்த செயலைப் பற்றி கூறினான். "ஒரு ஸென் குரு இப்படி செய்யலாமா?", "எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவது தானே புத்த மதத்தின் அடிப்படைக் கொள்கை?" என்று அனைவரும் குருவின் செயலை எண்ணி வெட்கம் அடைந்தனர்.

சில நாட்கள் கழித்து, ஒரு வழியாக அவர்களில் ஒருவன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "குருவே!! நீங்கள் இந்த வழியில் மேய்ந்து கொண்டிருந்த மானை கல்லை கொண்டு அடித்தீர்களே!! அது சரியா?." என்று கேட்டான்.குரு மெதுவாக "ஆமாம்!! சில நாட்களாக வழி தவறி இங்கே வந்து மேய்ந்து கொண்டிருந்த மானைப் பார்த்தேன். அதுவே பழக்கமாகி இங்கே வந்து மேய்ந்து கொண்டிருந்தால், இந்த வழியாக செல்லும் வேடர்களின் கண்களில் பட்டு விடும், அதனை தவிப்பதற்காகவே சிறிய கற்களைக் கொண்டு மான்களை அடித்து விரட்டினேன்" என்றார்.

நீ திருப்தியுடன் இல்லை.


ஒரு கட்டுப் பாடான ஸென் மடத்தில் பத்து வருடங்களுக்கு ஒரு முறை இரண்டு வார்த்தைகளே சீடர்கள் பேச அனுமதிக்கப் பட்டது.

பத்து வருடங்கள் முடித்த ஒரு சீடன், மடத்தின் குருவைப் பார்க்க சென்றான்.
குரு "ஆமாம்.. பத்து வருடங்களாகிவிட்டது!! என்ன சொல்ல நினைக்கிறாய்?" என்று சீடனைப் பார்த்து கேட்டார்.
சீடன்: "மெத்தை... கடினம்..." என்றான்.
குரு: "அப்படியா?" என்று முறுவலித்தார்.

அடுத்த பத்து வருடங்கள் உருண்டு ஒடின. சீடன் மடத்தின் குருவை பார்க்க சென்றான்.
குரு: "பத்து வருடங்கள் முடிவில் எந்த இரண்டு வார்த்தைகளை பேச நினைக்கிறாய்?"
சீடன்: "சாப்பாடு.. கெட்டது.."
குரு : "அப்படியா?" என்றார்.

மீண்டும் பத்து வருடங்கள் உருண்டு ஒடின. சீடன் மடத்தின் குருவை பார்க்க சென்றான்.
குரு: "ம்.. பத்து வருடங்கள் முடிவில் எந்த இரண்டு வார்த்தைகளை பேச போகிறாய்?"
சீடன்: "நான்.. போகிறேன்!" என்றான்.
குரு: "நல்லது!!", "ஏன் நீ போகிறாய் எனத் தெரியும்","எப்பொழுதுமே நீ திருப்தியுடன் இல்லை." என்றார்.