வெள்ளி, 30 ஏப்ரல், 2010

கரிய மூக்கு புத்தர்.

ஒரு பெண் புத்தத் துறவி தன்னொளி பெறுவதற்காக அலைந்து திரிந்து கொண்டிருந்தாள். அவள் தங்கத்தால் வெகு அழகாக புத்தச் சிலை ஒன்றினைச் செய்தாள். எங்கு சென்றாலும் அந்தச் சிலையைக் கூடவே எடுத்துச் செல்வாள்.

நாட்கள் கடந்தன. அப்படியே நடந்து கொண்டிருந்தவள், அமைதியான ஆனால் இயற்கை அழகுடன் இருந்த ஒரு கிராமத்திற்கு வந்தாள். அங்கு இருந்த சிறிய புத்தக் கோயிலை மிகவும் பிடித்து விட்டது. அங்கேயே வசிப்பது என முடிவெடுத்தாள். அந்தச் சிறிய கோயிலில் பல புத்தர் சிலைகள் இருந்தன. (புத்த விஹாரங்களில், பிக்ஷுக்கள் வசிப்பது இயல்பு. சில இந்துக் கோயில்களில் பூஜை செய்யும் சுவாமிகளுக்கும் மடப் பள்ளி என்ற பெயரில் ஒரிடம், கோயிலிற்கு மிக அருகாமையில் ஒதுக்கி கொடுத்து இருப்பார்கள். புத்த விஹாரங்களிலும் இது போன்று அனுமதிக்கப் பட்டது.)

தன்னுடைய தங்கச்சிலைக்கு நறுமணப் பொருட்களை (சாம்பிராணி, ஊதுவத்தி) எற்றி வைக்க ஆசைப் பட்டாள். ஆனால் அந்த சின்னக் கோயிலில் இருந்த மற்ற புத்த விக்கிரங்களுக்கு தன்னுடைய நறுமணப் பொருட்கள் செல்லக் கூடாது என முடிவெடுத்தவள், அதற்காக ஒரு கூம்பு வடிவினால் ஆன புனல் ஒன்றினைத் தயாரித்தாள். சாம்பிராணி ஏற்றியதும், அது அவளுடைய புத்த விக்கிரத்திற்கு மட்டுமே போகும்படி செய்தாள். சாம்பிரானியும் புத்தரின் முகத்திற்கு அருகில் மட்டுமே சென்றது. ஆனால் கொஞ்ச நாட்களில் தங்க புத்தரின் மூக்கு கறுத்துப் போய் மிகவும் அசிங்கமாகிவிட்டது.

அன்றிலிருந்து "கருத்த மூக்கு புத்தா பிக்ஷுனி" என்றே எல்லாரும் அவளை அழைக்க ஆரம்பித்தனர்.

வெளிப் படையாக காதலி..

ஒரு ஸென் ஆசிரியரிடம் இருபது புத்த பிக்ஷுக்களும், ஒரே ஒரு புத்த பிக்ஷுனியும் தியானத்தினை பயிற்சி செய்து வந்தனர்.

ஈஸுனின் தலை மொட்டை அடிக்கப் பட்டிருந்தாலும், காவி உடையினை அணிந்திருந்தாலும், மிகவும் அழகாகவே பார்ப்பவர்களுக்குத் தெரிந்தாள். இயற்கையிலேயே அழகான அவள், துறவியாக இருந்த போதும் மற்றவர்களை சுண்டி இழுக்கும் வசிகரத் தோற்றத்தினைப் பெற்றிருந்தாள்.

எல்லாத் துறவிகளும் மனதிற்குள் அவளைக் காதலிக்க ஆரம்பித்தனர். அதற்கும் மேலே போய் ஒரு துறவி அவளுக்கு காதல் கடிதம் எழுதி தனிமையில் சந்திக்க வேண்டும் என்று அனுமதியும் கேட்டான். ஈஸுன் அவனுக்கு பதில் எதுவும் எழுத வில்லை. தகுந்த நேரத்திற்காக காத்திருந்தாள்.

மறுநாள் ஆசிரியர் பயிற்சியினை ஆரம்பித்து உரையாற்றிக் கொண்டிருந்தார். உரை முடிந்ததும், இது தான் சமயம் எனக் காத்திருந்த ஈஸுன் வெடுக்கென எழுந்து , காதல் கடிதம் எழுதியவனைப் பார்த்து, "நீ உண்மையாகவே என்னை மிகவும் விரும்பிக் காதலிக்கிறாய் என்றால், அருகில் வா, வந்து இப்பொழுது எல்லார் முன்னிலையிலும் என்னை கட்டி அனைத்துக் கொள்" என்றாள். அவ்வளவுதான் அங்கிருந்தவர்கள் ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை.

அன்றிலிருந்து ஒருவரும் அவள் நின்றிருந்த பக்கம் கூட தலை சாய்த்துப் பார்க்க வில்லை. தன்னுடைய பிக்ஷுனி பயிற்சியை சிறப்பாக முடித்தாள். தன்னொளி பெற்று பிறர் பெறவும் உதவி புரிந்தாள்.

பிக்ஷுனி ரியோனென் வாழ்க்கை

ரியோனென் 1797'ல் பிறந்தவர். புகழ் பெற்ற சமுராய் ஸிங்கனின் பேத்தி. இளம் வயதிலேயே அருமையான கவிதைகள் எழுதுவதில் வள்ளவர். தன்னுடைய பேரழகு மற்றும் கவிதைத் திறமையால் ஜப்பான் அரசியின் உதவிப் பணிப் பெண்ணாக வேலை செய்யும் அரும் பாக்கியம் கிடைத்தது. அவளுடைய திறமையால் பதினேழு வயதிலேயே நல்ல பெயரும் புகழும் சம்பாதித்து இருந்தாள்.

அரசியின் திடிர் மறைவால் ரியோனின் வாழ்க்கை மாற்றம் அடைந்தது. உலக வாழ்க்கையின் நிலை இல்லாத தன்மை அருகில் உள்ள உற்ற நண்பர்களையோ, பாசமான உறவினர்களையோ இழக்கும் போது தான் புலப்படும். ரியோனின் மன நிலை உலகத்தில் உள்ள பந்த பாசங்கள், பிறப்பு இறப்பு என்ற மாய சக்கரத்தின் சுழலில் தான் ஒரு சிறு துறும்பு எனத் தெள்ளத் தெளிவாக அறிவதற்கு அரசியின் மரணம் காரணமாக அமைந்தது. அப்பொழுது தான் ஸென்னில் சேர்ந்து துறவறத்தை மேற்கொள்ள முடிவெடுத்தாள்.

அது சாதரணமான முடிவல்ல, அழுத்தமான உறுதியான இறுதியான முடிவு. ஆனால் ஒரு அழகான இளம்பெண் சன்னியாசினியாக மாறுவதற்கு மற்றவர்கள் சம்மதிக்க வேண்டுமே.

அவளுடைய உறவினர்கள் வற்புறுத்தலால் திருமணம் செய்ய சம்மதித்தாள். ஆனால் மூன்று குழந்தைகள் பெற்றதும் சன்னியாசினி ஆக மாறுவதற்கு ஒத்துக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவாதத்தினை பெற்றுக் கொண்டு திருமணம் செய்து கொண்டாள். 25 வயதில் தன்னுடைய கோரிக்கை நிறைவேறியதும் அவளால் ஒரு நிமிடம் கூட காத்திருக்க முடிய வில்லை. உறவினர், கணவர், குழந்தைகள் அனைவரும் தடுத்த போதும் பந்தங்களிலிருந்து விடுபட்டு, மொட்டை அடித்துக் கொண்டு ரியோன் என்ற புதுப் பெயரினைச் சூட்டிக் கொண்டாள்.

தன்னுடைய புனித பயணத்தை ஆரம்பித்தவள் அங்கிருந்து கிளம்பி ஈடோவில் இருந்த தேட்சுகியுவிடம் சென்று அவருடைய பெண் சீடராக சேர்வதற்கு அனுமதி கேட்டாள். ஒரு கணம் கூட சிந்திக்காமல் அவளுடைய பேரழகைப் பார்த்து அனுமதி தர மறுத்து விட்டார்.

ரியோன் மற்றொரு ஆசிரியர் காகுவோவிடம் சென்று அனுமதி கேட்டாள். அவரும் அவளுடைய அழகு துன்பத்தையும், பிரச்சனைகளையும் தோற்றுவிக்கும் என்று கூறி நிராகரித்து விட்டார்.

அதைக் கேட்ட ரியோன், அங்கிருந்த தகிக்கும் இரும்பினை எடுத்து தன்னுடைய முகத்தினில் தேய்த்துக் கொண்டாள். அன்றிலிருந்து அவளுடைய புற அழகு என்றும் திரும்பிக் கிடைக்காத வகையில் சிதைந்து விட்டது. காகுவோ ரியோனெனை மாணவியாக சேர்த்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சி நடந்ததின் நினைவாக, ரியோன் ஒரு சிறிய கண்ணாடியின் பின்புறத்தில் கவிதை ஒன்றினை எழுதினாள்.

பேரரசிக்கு பணிபுரிந்து நறுமணத்தை எரித்தேன் - என்னுடைய
பேரழகு உடைகளுக்கு வாசனை திரவியத்தையும் தெளித்தேன்
பரதேசியாய் பற்றற்று வீதியிலே அலைந்தேன் - பற்றற்ற
பராரியாய் ஸென்னில் சேர்வதற்கு முகத்தினையும் எரித்தேன்

அதன் பின்பு தன்னொளி பெற்று சிறந்த புத்தத் துறவியாகத் திகழ்ந்தாள்.
ரியோனென் அறுபத்து ஆறு வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து நிர்வாணம் அடையும் தருவாயில் இந்தக் கவிதையினை விட்டு விட்டு சென்றார்.

இளவேனில் மாறுவதை இந்தக் கண்களும்
அறுபத்து ஆறு முறை பார்த்தன - அந்த
நிலவோளியின் பேரழகை கேட்காதே
நினைவின்றி பல முறை சொன்னேன் - இந்த
பைந்தென்றல் பாரினிலே வீசாத போதும்
பைன், சிடாரின் பேச்சினையேக் கேள்.