திங்கள், 3 மே, 2010

பிசாசை துரத்து...

ஒருவனுடைய மனைவி மிகவும் நோய்வாய் பட்டு மருத்துவமனையில் இருந்தாள். அவள் இறக்கும் தருவாயில் தன்னுடைய கணவனிடம் "ஐ லவ் யூ சோ மச்! உன்னை விட்டுவிட்டு போகுவதற்கு மனம் இல்லை. உயிரோடு இருக்க மாட்டேன் என்பது நிச்சயம். ஆனால் எனக்கு நீ துரோகம் செய்வது பிடிக்காது. எனக்கு ஒரு சத்தியம் செயது கொடுக்க வேண்டும். நான் செத்த பின்பு வேறு எந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்" என்றுக் கேட்டாள். கணவனும் அவள் கேட்டவாறே சத்தியம் செய்து கொடுத்தான். "சத்தியத்தை மீறி திருமணம் செய்தால் ஆவியாக வந்து உன்னை நான் துன்புறுத்துவேன்" என்று பயமுறுத்தி விட்டு செத்தாள்.

பல மாதங்கள் தன்னுடைய மனைவிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை தவறாமல் காத்து வாந்தான். ஆனால் முடிவில் எதேச்சையாக சந்தித்த ஒரு பெண்ணிடம் மனதை பறிகொடுத்தான். இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்யப் பட்டது. அன்று இரவு ஆவியாக அவனுடைய மனைவி வந்தாள். அவன் தனக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை என்று மிகவும் குறைபட்டுக் கொண்டாள். அதன் பிறகு ஒவ்வொரு இரவும் அவன் தூங்குபோது வந்து அவனை தொந்தரவு செய்ய ஆரம்பித்தாள். எதிர்கால மனைவியுடன் அவன் தனிமையில் பேசிய ஒவ்வொன்றையும் அந்த பிசாசு ஒரு வார்த்தை கூட மாறாமல் திருப்பிக் கூற ஆரம்பித்தது. நாட்கள் செல்ல செல்ல அதனுடைய தொந்திரவு அதிகரிக்க ஆரம்பித்தது அவனால் கொஞ்சம் கூட தூங்க முடியவில்லை.

பக்கத்து கிராமத்தில் இருந்த ஸென் ஆசிரியர் ஒருவரிடம் நடந்த கதை எல்லாவற்றையும் கூறி தன்னை அந்தப் பிசாசிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். "மிகவும் புத்திசாலியான பிசாசாக இருக்கும் போலிருக்கிறதே" என்று கதையைக் கேட்ட ஸென் ஆசிரியர் அவனைப் பார்த்துக் கூறினார். "ஆமாம், அது நான் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் அறிந்து வைத்து இருக்கிறது. நான் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் நினைவு வைத்திருந்து என்னிடமே திரும்ப சொல்கிறது" என அசிரியரைப் பார்த்து பரிதாபமாக கூறினான். "அந்த பிசாசை நாம் பாராட்டமல் இருக்க முடியாது. இருந்தாலும் நான் கூறுவைதைப் போல் அடுத்த முறை செய்" என்று அவன் காதில் ஒரு விஷயத்தைக் கூறினார்.

அன்று இரவு வந்த பிசாசிடம், ஸென் ஆசிரியர் கூறியவாறு "நீ உண்மையிலேயே புத்திச்சாலியான பிசாசு" என்று கூறியவன், மேலும் தொடர்ந்து "உன்னிடமிருந்து நான் எதையும் மறைக்க முடியாது. நீ என்னுடைய ஒரு கேள்விக்கு பதில் அளித்தால், நான் என்னுடைய நிச்சய தார்த்தை நிறுத்தி விடுகிறேன். மேலும் வாழ்நாள் முழுவதும் தனி மனிதனாகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறேன்" என்று அவனுடைய முன்னாள் மனைவி இன்னாள் பிசாசினைப் பார்த்துக் கூறினான். "உன்னுடைய கேள்வியைக் கேள்", என்று பிசாசு கூறியது தான் தாமதம் கீழே ஒரு பெரிய பின்ஸ் மூட்டையில் இருந்து ஒரு கைப்பிடி பின்ஸை எடுத்துக் கொண்டு, "என்னுடைய கையில் எத்தனை பின்ஸ் இருக்கிறது என்று சொல்" என்றான்.

(அந்த நிமிடமே அந்தப் பிசாசு அவன் கண்களிலிருந்து மறைந்தது. அன்று சென்றதுதான் என்றுமே திரும்பி வரவில்லை.

இந்தக் கதையிலிருந்து நமக்கு பல விஷயங்கள் தெரிய வருகிறது.
1. உன்னால் காப்பற்ற முடியாத சத்தியத்தை தராதே.
2. சத்தியத்தை கொடுத்த பின்பு மீற முயற்ச்சிக்காதே. உன் ஆழ்மனமே உன்னைக் காட்டிக் கொடுத்து விடும்.

மிகவும் அன்பான மனைவி தான் இறந்தபின்பு தன்னுடைய கணவன் நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணாமல் சுய நலத்திற்காக ஒரு வரம் கேட்கிறாள். சத்தியம் செய்து கொடுத்த கணவனோ அதனைக் காப்பாற்ற முடிய வில்லை. உண்மையில் அங்கு ஒரு பிசாசும் இல்லை. அவன் செய்த அனைத்து செயல்களும் அவனுக்கு தெரியும். அவன் தன்னுடைய எதிர்கால மனைவியிடம் பேசிய ஒவ்வொன்றும் அவனுக்கு ஞாபகத்தில் இருக்கும்.

ஆழ்ந்த உறக்கத்தில் அவனுடைய ஆழ்மனது விழித்துக் கொள்கிறது. தன்னுடைய மனைவிக்கு கொடுத்த வாக்கை மீறுகிறோமே என்ற மன அழுத்தமே பிசாசாக உருவேடுக்கிறது. அதனால் மனைவிக்கு பிடிக்காமல் செய்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவன் கண்முன் தோன்றி அவனைத் தூக்கம் வரவிடாமல் அலைகழிக்கிறது.

நமது தன்னொளி பெற்ற ஸென் ஆசிரியர் இதனை புரிந்து கொள்கிறார். கைப்பிடி பீன்ஸை எடுத்து எத்தனை இருக்கிறது எனக் கேட்க சொல்கிறார். உண்மையில் பீன்ஸை எடுத்த அவனுக்கே எத்தனை பீன்ஸ் அவனுடைய கைப்பிடியில் இருக்கிறது என்று தெரியாது. அதணால் அவனுக்கு தெரியாத எந்த ஒரு விஷயமும் ஆழ்மனதிற்கும், பிசாசிற்கும் தெரியாமல் போகிறது. அதணால் அன்றிலிருந்து பதில் சொல்லத் தெரியாத பிசாசு வரவில்லை. ஸென் ஆசிரியர் கொடுத்த ஆழ்மனப் பயிற்சி ஒழுங்காக வேலை செய்கிறது.)