செவ்வாய், 20 ஏப்ரல், 2010

சுவையானது!

ஸென் குரு தாஜி (1889 - 1953 ) சாகும் தருவாயில் இருந்தார். அவருடைய சீடர்கள் அனைவரும் அவருடைய படுக்கை மெத்தையைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். அதில் ஒரு சீடன் குருவின் மிகவும் விருப்பமான ஒரு குறிப்பிட்ட வகையான அரிதில் கிடைக்கும் கேக் ஒன்றினைத் தேடி, கடை கடையாக ஏறி இறங்கி அரை நாள் செலவழித்து டோக்கியோவில் இருந்து வாங்கி வந்தான்.

வெளிறிய கண்களுடன் இருந்த குரு, கேக்கினைப் பார்த்து புன்னகையை வரவழைத்துக் கொண்டு வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக நம்நம் என்று சத்ததுடன் சாப்பிட ஆரம்பித்தார்.

நிர்வாணம் (முக்தியை/சாவை) அடையும் தருவாயில் இருக்கும் ஸென் குருக்களிடம் அவர்களுடைய கடைசி வார்த்தை என்ன என்றுக் கேட்டு எழுதி வாங்கி வைத்துக் கொள்வது வழக்கம்.

கொஞ்ச நேரத்தில் களைப் படைந்து, கண்கள் சொருகும் நிலையில் இருந்த அவரிடம் சீடர்கள், "ஏதேனும் கடைசி அறிவுரை (அ) வார்த்தைகள் இருக்கிறதா?" எனக் கேட்டனர்.

"ஆமாம்" என்றார் குரு தாஜி. சீடன் மிகவும் முன்னே வந்து கவனமாக அவருடைய அருகில் குனிந்து ஒரு வார்த்தையைக் கூட தவற விடாமல் கேட்டு எழுதுவதற்கு ஆயத்தமானான்.

"சொல்லுங்கள், குருவே" என்றான் சீடன்.

"என்னுடைய..., ஆனால் இந்தக் கேக் மிகவும் சுவையானது!" என்று கூறியவாரே, மறைந்து போனார்.

தவிப்பதற்காகவே.

ஒரு ஸென் மடத்தின் இளைய துறவி, தனது மடத்தின் தலைமை குரு செய்த செயலைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான். தலைமை குரு செய்த செயலைப் பார்த்தும் அவரிடம் நேரடியாக எதுவும் கேட்க மனம் இல்லாமல் அங்கிருந்து மௌனமாக சென்றான். பின்பு பொருக்க முடியாமல், தன்னுடைய நண்பர்களிடம் குரு செய்த செயலைப் பற்றி கூறினான். "ஒரு ஸென் குரு இப்படி செய்யலாமா?", "எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவது தானே புத்த மதத்தின் அடிப்படைக் கொள்கை?" என்று அனைவரும் குருவின் செயலை எண்ணி வெட்கம் அடைந்தனர்.

சில நாட்கள் கழித்து, ஒரு வழியாக அவர்களில் ஒருவன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "குருவே!! நீங்கள் இந்த வழியில் மேய்ந்து கொண்டிருந்த மானை கல்லை கொண்டு அடித்தீர்களே!! அது சரியா?." என்று கேட்டான்.குரு மெதுவாக "ஆமாம்!! சில நாட்களாக வழி தவறி இங்கே வந்து மேய்ந்து கொண்டிருந்த மானைப் பார்த்தேன். அதுவே பழக்கமாகி இங்கே வந்து மேய்ந்து கொண்டிருந்தால், இந்த வழியாக செல்லும் வேடர்களின் கண்களில் பட்டு விடும், அதனை தவிப்பதற்காகவே சிறிய கற்களைக் கொண்டு மான்களை அடித்து விரட்டினேன்" என்றார்.

நீ திருப்தியுடன் இல்லை.


ஒரு கட்டுப் பாடான ஸென் மடத்தில் பத்து வருடங்களுக்கு ஒரு முறை இரண்டு வார்த்தைகளே சீடர்கள் பேச அனுமதிக்கப் பட்டது.

பத்து வருடங்கள் முடித்த ஒரு சீடன், மடத்தின் குருவைப் பார்க்க சென்றான்.
குரு "ஆமாம்.. பத்து வருடங்களாகிவிட்டது!! என்ன சொல்ல நினைக்கிறாய்?" என்று சீடனைப் பார்த்து கேட்டார்.
சீடன்: "மெத்தை... கடினம்..." என்றான்.
குரு: "அப்படியா?" என்று முறுவலித்தார்.

அடுத்த பத்து வருடங்கள் உருண்டு ஒடின. சீடன் மடத்தின் குருவை பார்க்க சென்றான்.
குரு: "பத்து வருடங்கள் முடிவில் எந்த இரண்டு வார்த்தைகளை பேச நினைக்கிறாய்?"
சீடன்: "சாப்பாடு.. கெட்டது.."
குரு : "அப்படியா?" என்றார்.

மீண்டும் பத்து வருடங்கள் உருண்டு ஒடின. சீடன் மடத்தின் குருவை பார்க்க சென்றான்.
குரு: "ம்.. பத்து வருடங்கள் முடிவில் எந்த இரண்டு வார்த்தைகளை பேச போகிறாய்?"
சீடன்: "நான்.. போகிறேன்!" என்றான்.
குரு: "நல்லது!!", "ஏன் நீ போகிறாய் எனத் தெரியும்","எப்பொழுதுமே நீ திருப்தியுடன் இல்லை." என்றார்.

அதிர்ஷ்டம்.

ஒரு விவசாயின் பண்ணையில் இருந்த குதிரை ஒடிப் போய்விட்டது. அதனைக் கேட்ட பக்கத்தில் இருந்தவர்கள் அந்த விவசாயிடம் சென்று தனது வருத்தத்தினை தெரிவித்தனர். அதற்கு விவசாயி "இதனை நான் துரதிருஷ்டமாக கருதவில்லை" என்று பதிலுரைத்தார். அந்த ஊர் மக்கள் தலையை ஆட்டிக் கொண்டே அங்கிருந்து அகன்றனர்.

அடுத்த நாள் விவசாயின் குதிரை மற்ற மூன்று காட்டு குதிரைகளுடன் வீட்டிற்கு வந்தது. ஊர் மக்கள் அதனைக் கண்டு வியப்படைந்து விவசாயிடம் மகிழ்ச்சியுடன் உனக்கு அதிர்ஷ்டம் வந்து உள்ளது எனப் பாராட்டினர். அதற்கு விவசாயி மெதுவாக "இதனை அதிர்ஷ்டமாக கருதவில்லை" என்று அவர்களைப் பார்த்து கூறினார். இதனைக் கேட்ட மக்கள் முன்பைவிட குழப்பமாக அங்கிருந்து கிளம்பினர்.

அந்த வாரத்தின் கடைசியில் விவசாயின் மகன் புதுக் குதிரையை பழக்குவதற்காக சென்ற போது கால் உடைந்து வீட்டிற்கு வந்தான். ஊர் மக்கள் விவசாயியைப் பார்த்து தங்கள் வருத்தத்தினை தெரிவித்தனர். விவசாயி முன்பை போலவே "இதனை துயரமாக கருதவில்லை" என்று கூறினார். மக்கள் விவசாயிற்கு என்ன ஆயிற்று தனது மகன் கால் உடைந்ததை கூட துயரமாக கருதவில்லை என்று கூறியவாறு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அடுத்த நாள் நாட்டின் மன்னர் அந்த ஊரிலிருந்த வாலிபர்களை தனது இராணுவத்தில் சேர்ப்பதற்காக வந்தார். விவசாயின் மகன் கால் உடைந்து இருந்ததால் அவனை இராணுவத்தில் எடுத்துக் கொள்ள வில்லை.

சீடனான திருடன் .

ஒரு மாலைப் பொழுதில் ஷிசிரு கோஆன் சூத்திரங்களை பாராயணம் செய்து கொண்டிருந்த பொழுது திருடன் ஒருவன் தீட்டிய வீச்சு அறுவாளுடன் வந்து அவரை பார்த்து "பணம் கொடு இல்லையேல் நீ பிணம்" என்று மிரட்டினான்.

ஷிசிரு கொஞ்சமும் பயம் இல்லாமல் "என்னை தொந்தரவு செய்யாதே!! அந்த பெட்டியின் உள்ளே பணம் உள்ளது" என்று அமைதியாக சொல்லி விட்டு தனது பாரயணத்தினைத் தொடர்ந்தார்.

கொஞ்சம் நேரம் கழித்து "எல்லா பணத்தினையும் எடுக்காதே!! நாளை வரி கட்டுவதற்கு கொஞ்சம் பணம் தேவை" என்று கூறினார்.

திருடன் கொஞ்சம் வைத்து விட்டு மீதி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கிளம்பினான். அப்பொழுது ஷிசிரு "நன்றி கூறிவிட்டு அன்பளிப்பை எடுத்துச் செல்!!" என்று கூறினார். திருடனும் நன்றி கூறிவிட்டு அங்கிருந்து நழுவினான்.

கொஞ்சம் நாட்களிலே அவனை கைது செய்தார்கள். அவன் மற்ற திருட்டுகளைப் பற்றியும் ஷிசிருவிடம் திருடியதைப் பற்றியும் கூறினான். ஷிசிரு சாட்சி கூறுவதற்காக அழைத்து வரப்பட்டார். அவர், "இந்த மனிதன் என்னை பொருத்த வரை திருடன் இல்லை. நான் கொடுத்த பணத்தை ஏற்றுக் கொண்டு எனக்கு நன்றி கூட கூறினான்" என்றார்.

திருடன் தன்னுடைய சிறைவாசத்தினை முடித்து விட்டு ஷிசிருவிடம் சீடனாக சேர்ந்தான்.

துறவியால் எந்த பயனும் இல்லை..

ஸென் துறவி ஜென்ஷா தனது சீடர்களிடம் "எல்லா துறவிகளும் மற்ற மனிதர்களை துன்பங்களிலிருந்து காப்பது பற்றியே சொல்கிறார்கள்." என்று கூறி நிறுத்தி, பின்பு தனது சீடர்களை நோக்கி, " நீங்கள் குருடன், செவிடன் மற்றும் ஊமையான ஒருவனை சந்திக்கிறிர்கள் என்று வைத்துக் கொள்வோம், அவனால் உங்களுடைய சைகைகளை பார்க்கவோ, போதனைகளை கேட்கவோ, சந்தேகத்தை திருப்பி கேள்வி கேட்டு புரிந்து கொள்ளவோ முடியாது, இப்படியாக அவனைக் காப்பாற்ற முடியாத நிலையிலேயே நீங்கள் இருப்பிர்கள். அப்படிப் பட்டவனிடம் துறவியான நம்மால் என்ன செய்ய முடியும்". என்றார்.

ஒரு சீடனால் ஜென்ஷாவின் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாமல் ஏதோ நெருடலாக உணர்ந்தான். உன்மான் ஜென்ஷாவைப் போல செப்போவின் சீடர். எனவே உன்மானைப் பார்த்து இது பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று சென்றான்.

உன்மான் மரியாதையுடன் "தலைவணங்கு" என்று சீடனைப் பார்த்துக் கூறினார். அதைக் கேட்டு வியந்த சீடன் அமைதியாக தலைவணங்கி தான் வந்த நோக்கத்தின் காரணத்தை சொல்லலாம் என்று நினைத்தான். அப்போது உன்மான் அவருடைய கையில் இருந்த கோலை அவனை நோக்கி போட்டார். அதைப் பார்த்து மிரண்ட சீடன் கொஞ்சம் விலகி கோல் தன்மேல் படாமல் பார்த்துக் கொண்டான்.

"நல்லது, நீ குருடன் இல்லை, இங்கு வா" என்று உன்மான் கூப்பிட்டார்
சீடன் குரு சொன்னது போலவே நடந்தான்.
நல்லது, நீ செவிடனும் இல்லை, உன்னால் புரிந்து கொள்ள முடியுமா?" என்றார் உன்மான்
"எதை புரிந்து கொள்வது? சாமி" என்றான்.
"நீ ஊமையும் அல்ல" இதைக் கேட்ட சீடனுக்கு திடிரென்று ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எழுந்தது போல உணர்ந்தான்.

புல்லும், மரமும் அறிவு ஜீவியா?

காமகுரா காலத்தில் ஷிங்கன் என்பவன் டெண்டாய் என்ற புத்தரின் மாகாயான தாமரை சூத்திரங்களை பற்றி ஆறு வருடமும், ஸென் பற்றி ஏழு வருடங்களும் படித்தான். அதன் பிறகு சைனாவிற்கு சென்று முழுமூச்சுடன் ஸென் பற்றி பதிமூன்று வருடங்கள் பயிற்சி செய்தான்.

ஜப்பான் திரும்பிய ஷிங்கனைப் பார்ப்பதற்கு பலர் வந்தனர். அவனிடம் கேள்விகளும், பேட்டிகளும் எடுப்பதற்கு பலர் முனைந்தனர். ஆனால் பார்வையாளர்களின் வினாக்களுக்கு எப்பொழுதாவது தான் பதில் அளித்தான். பல சமயங்களில் பதில் கூறுவதை தவிர்த்தான்.

ஒரு நாள் ஐம்பது வயதான தன்னொளி பற்றி பயின்ற மாணவன் ஒருவன் ஷிங்கனைப் பார்த்து "நான் சிறு வயதிலிருந்து சிந்தனையைக் கிளரும் டெண்டாய் பள்ளியில் படித்து வருகிறேன். ஆனால் என்னால் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள முடிய வில்லை. புல்லும், மரங்களும் கூட தன்னொளியான அறிவு ஞானத்தை பெறுவதாக டெண்டாய் கூறுகிறது. எனக்கு அதனைக் கேட்பதற்கே வித்தியாசமாக இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறிர்கள்?" என்று கேட்டான்.

"புல்லும், மரமும் தன்னொளியை பெறுகின்றனவா இல்லையா என்பதைப் பற்றி விவாதிப்பதில் என்ன பயன் இருக்கிறது?" என்ற ஷிங்கன், அந்த முதிய மாணவனைப் பார்த்து "என்னுடைய கேள்வி என்ன என்றால், நீங்கள் என்றாவது தன்னொளியைப் பெறுவது எப்படி என்று சிந்தித்து இருக்கிறிர்களா?" என்று பதில் வினாவினை எழுப்பினார்.

அதற்கு அந்த முதியவர் "நான் எப்பொழுதும் இந்த விதத்தில் சிந்தித்து பார்க்க வில்லை" என்று வியந்து கூறினார்.
"அப்படியானால் வீட்டிற்கு சென்று என் கேள்வியைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்" என்று கூறி விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார் ஷிங்கன்.

நிலவை கொடுத்திருப்பேன்.

ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் இருந்த சிறிய குடிசையில் ஸென் துறவி ரியோகன் எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். ஒரு நாள் இரவு திருடன் ஒருவன் குடிசையில் நுழைந்து ஏதெனும் கிடைக்குமா என்று தேடி ஒன்றும் கிடைக்காமல் ஏமாந்தான். அந்த நேரத்தில் உள்ளே நுழைந்த துறவி திருடனைப் பார்த்து "இவ்வளவு தூரம் என்னை பார்ப்பதற்காக வந்த நீ ஏமாந்து வெறுங்கையுடன் திரும்பக் கூடாது, என்னுடைய உடைகளை எடுத்துச் செல்!!." என்று கூறினார். வியப்பும், குழப்பமும் அடைந்த திருடன் உடைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து விரைவாக நழுவினான். உடைகள் அற்ற துறவி நிர்வாணமாய் உட்கார்ந்து தொலைவில் தெரிந்த அழகிய நிலவினைப் பார்த்து இரசித்தார், பின்பு "முட்டாள் நான்!! இந்த அழகிய நிலவை திருடனிடம் கொடுத்து இருந்து இருக்கலாம்" என்று எண்ணினார்.M.JAIDEEP(9790113638)  Email id:Jai@precisionit.co.in

இளைப்பாறி செல்லுமிடம்....


ஒரு அரண்மனைக்கு வந்த துறவியை எந்த காவலாளியும் தடுக்காததால் மன்னன் இருந்த சபைக்கு சென்றார். சபையில் இருந்த மன்னனைப் பார்த்து "இந்த தங்கும் விடுதியில் தூங்குவதற்கு ஒரு இடம் வேண்டும்" என்று கேட்டார்.
மன்னன் "இது தங்கும் விடுதி இல்லை - அரண்மனை, என்னுடைய இடம்" என்றார்.
துறவி மன்னனைப் பார்த்து "நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா?. - உனக்கு முன்னடி இந்த இடத்தில் யார் இருந்தது?" என்று கேட்டார்.
மன்னர் "எனது தந்தை!! இறந்துவிட்டார்" என்றார்.
"அதற்கு முன்பு?"
"எனது தாத்தா!! இறந்துவிட்டார்"
"அதற்கு முன்பு?"
"எனது பாட்டன்!! அவரும் இறந்துவிட்டார்"
துறவி "சிறிது காலம் இருந்து இளைப்பாறி செல்லும் இந்த இடத்தை தங்கும் விடுதி என்று கூறாமல் வேறு என்ன கூறுவது?" என்று கேட்டார்.

மாயை எது? நிஜம் எது?


ஒரு திறமை மிக்க ஜப்பானிய போர் வீரன் பகைவர்களால் பிடிக்கப் பட்டு சிறையில் தள்ளப் பட்டான்.
அன்று இரவு முழுவதும் தூக்கம் வரமால் நாளையைப் பற்றி கவலைப் பட்டான்,
காலையில் அவனை கேள்வி கேட்டு துளைக்கப் போகிறார்கள்,
பதில் சொல்லாவிட்டால் சித்தரவதை செய்யப் போகிறார்கள்,
முடிவில் கொன்றாலும் கொன்று விடுவார்கள்.
இப்படியாக பல சிந்தனைகளில் தூக்கம் வராமல் புரண்ட அவனுக்கு தன்னுடைய ஸென் ஆசிரியர் கூறிய "நாளை என்பது இல்லாத மாயை, இன்று மட்டுமே தெரிந்த நிஜம்" என்பது ஞாபகம் வந்தது.
அந்த நினைவுகளுடனே எந்தக் கவலையும் இல்லாமல் அமைதியாக உறங்கிப் போனான் அந்த போர் வீரன்.

மௌனத்தின் சத்தம்...

நான்கு புத்த மடத்து துறவிகள் இரண்டு வாரத்திற்கு எதுவும் பேசாமல் மௌனமாக தியானம் செய்வது என முடிவெடுத்தனர். அன்று இரவு படபடவென அடித்த காற்றில் ஏற்றி வைத்திருந்த மெழுகுவத்தி மினுமினுக்கென நிலையற்று எரிந்து முடிவில் அனைந்து விட்டது.
முதல் துறவி: "ஆ!! மெழுகுவத்தி அனைந்து விட்டது"
இரண்டாம் துறவி மெதுவாக: "பேசக் கூடாது என்று அல்லவா, நாம் முடிவெடுத்து இருந்தோம்?"
மூன்றாம் துறவி கோபமாக: "நீங்கள் இருவரும் ஏன் மௌனத்தை கலைத்து விட்டிர்கள்?"
நான்காம் துறவி சிரித்தவாறே: "ஹா ஹா! நான் ஒருவன் தான் பேச வில்லை"