வெள்ளி, 30 ஏப்ரல், 2010

புரிய வில்லை.


எதை புரிந்தாலும் புரியாவிட்டாலும்.. எந்த நிலையில் இருந்தாலும்.. அந்த நிலையே நீ அடைந்த நிலை.

பல வருடங்கள் பயிற்சியில் ஈடுபட்ட மாணவன் ஒருவன் ஆசிரியர் டைனின் காடாகிரி ரோஸியிடம் வந்து "நீங்கள் முன்பெல்லாம் சொற்பொழிவு ஆற்றும் போது ஏதோ புரியும் படி இருக்கும், ஆனால் இப்பொழுது எல்லாம் நீங்கள் பேசுவது என்ன என்றே புரிய வில்லை" என்று கூறினான்.

ஆசிரியர் காடாகிரி அசட்டுத் தனமான முகத்துடன் சிரித்துக் கொண்டே, "கடைசியாக, நீ எதையோ புரிந்து கொள்வது போல் தெரிகிறதே" என்றார்.

எப்படி சொல்லுகிறாய்.


ருடாகிஜி மடத்தில் பயிற்சிக்காக வந்திருந்த அமெரிக்கர்கள் பிளிப் காப்லேவையும், பெர்னார்டு பிளிப்பையும் தனியாக அழைத்து சோயன் நாககாவா ரோஸி பின்வருமாறு கேட்டார்.
"இயேசு சிலுவையில் உயிர் நீக்கும் தறுவாயில் என்ன கூறினார்?"

காப்லே, "என் தந்தையே, ஏன் என்னைக் கைவிட்டு விட்டீர்கள்?" என்று இயேசு கூறியதாக பதில் சொன்னார்.
"இல்லை" என்று கத்திய சோயன் ரோஸி, பிளிப்பினை நோக்கி, "இயேசு சிலுவையில் உயிர் நீக்கும் தறுவாயில் என்ன கூறினார்" என்று மறு படியும் கேட்டார்.
"காப்லே கூறியது சரியேன்றே எனக்குப் படுகிறது" என்று கூறிய பிளிப், "அவர் சொன்னார், 'என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டு விட்டீர்கள்?' " என்று பதில் கூறினார்.

"இல்லை" என்று மறுத்து அவர்கள் கூறிய பதிலினை ஏற்றுக் கொள்ள வில்லை சோயன் ரோஸி.

பொருமையை இழந்து "அப்படி என்றால் அவர் என்ன தான் கூறினார்?" என்று இருவரும் கேட்டார்கள்.

சோயன் ரோஸி தன்னுடைய கரங்களை மேலே தூக்கி வானத்தைப் பார்த்து கதறலான வேதனையுற்ற குரலுடன், "என் தந்தையே, ஏன் என்னைக் கைவிட்டு விட்டீர்கள்?" என்று அழுது கொண்டே கத்தினார்.

வாழ்க்கையின் முதல் அழகிய புன்னகை.


ஆசிரியர் மொகுஜென் தன்னுடைய வாழ் நாளில் சிரித்ததோ, புன்னகை செய்ததோ கிடையாது. எப்பொழுதும் முகத்தினை கடுமையாக வைத்துக் கொண்டிருப்பார். இறக்கும் தறுவாயில் இருந்த போது தன்னுடைய நம்பிக்கைக் கூறிய சீடர்களை அழைத்து, "நீங்கள் கடந்த பத்து வருடமாக ஸென்னினை என்னிடம் கற்று வருகிறீர்கள். நீங்கள் ஸென்னைப் பற்றி புரிந்து கொண்டதை பற்றி என்னிடம் விளக்கிக் காட்டுங்கள். யார் ஒருவன் மிகத் தெளிவாக விளக்குகிறானோ அவனே எனக்கு பிறகு இந்த மடத்தினை நிர்வகிக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள முடியும். அவனுக்கே என்னுடைய மேலங்கியும், திருவோட்டையும் தருவேன்" என்று கூறினார்.

யாரும் பதில் கூறாமல், மொகுஜென்னுடைய கடுமையான முகத்தினைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

வேகு காலமாக ஆசிரியருடன் இருந்த சீடன் என்சோ, ஆசிரியரின் படுக்கையின் அருகே வந்தான். அருகில் இருந்த மருந்துக் கோப்பையை ஆசிரியரை நோக்கி நகர்த்தினான். அதுதான் அவன் ஆசிரியருக்கு அளித்த பதில்.

அதனைப் பார்த்த ஆசிரியரின் முகம் முன்பைவிட கடுமையானது. "இவ்வளவு தானா நீ புரிந்து கொண்டது" என்று நம்பிக்கைத் தேயந்த குரலில் கேட்டார்.

என்கோ மறுபடியும் படுக்கையின் அருகே சென்று கோப்பையை முன்பிருந்த இடத்திற்கே நகர்த்தினான்.

முகம் மலர்ந்த ஆசிரியர் மொகுஜென் அழகிய புன்னகையுடன். " பொருக்கி" என்று செல்லமாக திட்டியவர், "என்னுடன் இத்தனை வருடங்களாக இருந்திருந்தாலும் என்னுடைய முழு உடலையும் நீ பார்த்ததில்லை. என்னுடைய மேலங்கியையும், திருவோட்டையும் எடுத்துக் கொள். அது உன்னையேச் சேரும்" என்று கூறினார்.

அன்பும் துக்கமும் எங்கே?


ஹுய்சூ தன்னுடைய நண்பனும் டாவோயிஸத் துறவியுமான சூயாங்சூவினைப் பார்த்து அவருடைய அன்பு மனைவியின் மறைவிற்காக ஆறுதல் கூற வந்திருந்தார்.

சூயாங்சூவினைப் பார்த்தவர் திகைத்து விட்டார். அவர் குடிசைக்கு வந்த போது சூயாங்சூ கால்களுக்கு இடையில் மரத்தினால் ஆன பாத்திரத்தினை வைத்துக் கொண்டு தாளம் போட்டுக் கொண்டும், இராகம் ஒன்றினை உருவாக்கி பாட்டுப் பாடிக் கொண்டும் இருந்தார்.

ஹுய்சூ "இத்தனை வருடங்கள் உன்னுடைய அன்பான மனைவியுடன் திருப்திகரமாக குடும்பம் நடத்தி வந்தாய். உன்னுடையக் குழந்தைகளைச் சீராட்டி நல்ல முறையில் வளர்த்தாள். அவளுடைய மறைவிற்காக துக்கப் பட்டு கண்ணீர் சிந்தாவிட்டாலும் பராவாயில்லை ஆனால் தாளம் போட்டுக் கொண்டு பாட்டு பாடிக் கொண்டிருப்பதைப் பார்ப்பதற்கு சகிக்கவில்லை" என்று தன்னுடைய மனதில் தோன்றிய கோபத்தினை வார்த்தைகளாக வெளிப் படுத்தினார்.

அதற்கு சூயாங்சூ, "அப்படி இல்லை, நான் ஒரு சாதாரண மனிதன், அவள் இறந்த போது கண்ணீர் விட்டு துக்கப் பட்டேன். ஆனால் அவள் இந்த பூமியில் வருவதற்கு முன்பே எங்கோ ஜோதியாய் இருந்தாள். அந்த சமயத்தில் அவளுக்கு உடல் இல்லை. காலங்கள் கடந்த போது அவளுடைய ஆத்மாவுடன் பூத உடல் சேர்க்கப் பட்டது. சதையும், எலும்புகளும் சேர்ந்த ஆத்மாவுடன் கலந்து பிறந்தாள். எந்த ஒன்று இந்த உலகில் அவளுக்கு வாழ்வு கொடுத்ததோ அந்த ஒன்று அவளுக்கு மரணத்தினையும் கொண்டு வந்தது. குளிர்காலத்தினைத் தொடர்ந்து இளவேனிற்காலம் வருகிறது. இளவேனிற்காலம் கோடைக்காலத்தினைக் கொடுக்கிறது. கோடையும் வசந்தகாலமாக மாறுகிறது. வசந்தம் குளிர்காலமாக மாறுகிறது. இயற்கை எப்படி பருவகாலங்களைக் மாறி மாறி கொடுக்கிறதோ அதேப் போல் அவளது வாழ்வும் சாவும் மாறி மாறி வந்தது. இப்பொழுது பூமிக்கும், சொர்க்கத்திற்கும் இடையில் எங்கோ அமைதியாக தூங்கிக் கொண்டிருக்கிறாள். இந்த இயற்கையின் விதியினை அறிந்த பின்பும் நான் ஏன் துக்கப் பட வேண்டும். அறியாமையில் இருப்பதில் அர்த்தம் இல்லை." என்று அமைதியுடன் பதில் கூறினார்.

பிக்ஷுனி ஸாட்ஸுஜோவின் கண்ணீர்.


ஆழமான தன்னொளி பெற்ற ஸாட்ஸுஜோ தன்னுடைய பேத்தி இறந்த போது அவளால் தன்னுடைய துக்கத்தைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை.

அதே ஊரில் வசித்த ஒரு கிழவர் அதை பொருத்துக் கொள்ள முடியாமல் நயமாக, "எதற்காக இந்த அளவிற்கு துக்கப் பட்டு கண்ணீர் வடிக்கிறாய்? ஊரில் இருக்கும் மற்றவர்கள் இதனைப் பார்த்து 'எதற்கு புகழ் பெற்ற ஸென் ஆசிரியர் காகுயினிடம் பயிற்சி பெற்று தன்னொளி பெற்ற இந்தக் கிழவி தன்னுடைய பேத்தியின் மறைவிற்காக இப்படி அழுது புலம்பி ஒப்பாரி வைக்கிறது என்று கேட்பார்கள்?' நீ துக்கத்தினை மறந்து மனதினை தேற்றிக் கொள்ள வேண்டும்" என்று எடுத்துக் கூறினார்.

அதைக் கேட்ட ஸாட்ஸுஜோ அந்தக் கிழவனை ஒருமுறை உற்று பார்த்து விட்டு " மொட்டைத் தலைக் கிழவா, உனக்கு என்னத் தெரியும்? அழகான பூக்களை தூவுவதோ, நறுமணப் பொருட்களை சுற்றி வைப்பதோ, மெழுகு வர்த்தி மற்றும் விளக்கினை ஏற்றி வைப்பதை விட என்னுடைய கண்ணீரும், புலம்பலும் தான் என்னுடைய பேத்தியின் ஆத்மாவை சாந்தமாக்கும்" என்று கோபமாக கத்தி திட்டி விட்டு மறு படியும் ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்.

பிக்ஷுனி ஸுங்கோயின் வாழ்க்கை.


இளமையும் அழகும் மிகுந்த ஸுங்கோயின் மற்றொரு பெயர் ஸுசு. மற்றவர்களின் தொந்தரவால் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டாள். பின்பு மணமுறிவு (விவாகரத்து) எற்பட்ட போது, கல்லூரிக்குச் சென்று தத்துவம் பயின்றாள்.

அழகான ஸுங்கோவைப் பார்த்த யாரும் காதல் வயப்பட்டனர். அவளும் மற்றவர்களின் மீது காதல் வயப்பட்டாள். காதல் வயப்பட்டவளுக்கு தத்துவம் நிறைவைத் தரவில்லை. மடத்திற்கு சென்று ஸென் கற்றுக் கொள்ள முயன்றாள். ஆனால் அங்கிருந்த மாணவர்கள் அவள் மேல் காதல் வயப்பட்டனர். காதல், காதல்.. காதல் மூச்சு தினறும் அளவிற்கு காதல்.

அங்கிருக்கப் பிடிக்காமல் கியோடோ நகரத்திற்கு சென்று உண்மையான ஸென் துறவிகளுக்குரிய திடமும் உறுதியுடனும் இடைவிடாது பயிற்சியும், தியானமும் செய்தாள். கெனின் கோயிலில் இருந்த மற்ற சகோதரர்கள் அவளுடைய உறுதியைக் கண்டு வியந்தனர். புகழ்ந்தனர். அவர்களில் ஒருவன் மிகவும் உயர்ந்த நோக்கத்துடன் ஸென்னைப் பற்றியும், அவள் தன்னொளி பெறுவதற்கான வழியையும் சொல்லிக் கொடுத்தான்.

கென் கோயிலின் சமய குருவாக இருந்தவர் மொகுராய். "அமைதியான இடி" என்றுக் கூறப் படுபவர். கடுமையானவர். கோயிலின் விதிகள் அனைத்தும், புத்த தர்மங்கள் அனைத்தும் தெரிந்த அவர், மற்றவர்களுக்கு அதனைக் கூறாமல் தனக்குள்ளேயே வைத்திருந்தார். ஜப்பான் நாகரிகமாக மாறிய போது ஒரு சில துறவிகளும் அதற்கு ஏற்றவாறு மாறினர். பூஜை செயவதற்காக இருக்கும் தலைமைத் துறவி, நவ நாகரிக உலகில் மயங்கி திருமணம் செய்து கொண்டவர். மற்ற சில துறவிகளும் திருமணம் புரிந்து கொண்டனர். மொகுராய் அதனைக் கடுமையாக எதிர்த்தார்.

இந்தக் கோயிலில் இருந்த தலைமைத் துறவியின் மனைவி, ஸுங்கோவின் ஒழுக்கம், உறுதியுடன் செய்கின்ற பயிற்சி, ஆண்கள் அனைவரும் திரும்பிப் பார்க்கும் அழகு ஆகியவற்றைக் கண்டு பொறாமைக் கொண்டாள். அந்த பொறாமை என்ற அரிப்பினால், ஸுங்கோவின் மீது கட்டுக் கதை எற்றி அவளையும், அவளுக்கு உதவி செய்த மற்ற துறவியையும் இணைத்து, பழி சுமற்றினாள். அதணால் விசாரிக்காமல் ஸுங்கோ கோயிலிலிருந்து வெளியே துரத்தப் பட்டாள்.

"நான் முன்பு தவறு செய்து இருக்கலாம், ஆனால் எந்த தவறும் செய்யாத என்னுடைய நண்பனைப் பற்றி அவதூறு கூறிய தலைமைத் துறவியின் மனைவி இனி இந்தக் கோயிலில் வசிக்கக் கூடாது" என்று நினைத்தவள் 500 ஆண்டுகால பழைமை வாய்ந்த அந்தக் கோயிலிற்கு தீ வைத்து தரை மட்டம் ஆக்கினாள்.

மறுநாள் காவலாளிகள் அவளைக் கைது செய்து சிறை வைத்தனர். ஒரு இளம் வயது வக்கில் அவளுக்கு சிறைத் தண்டனையை குறைப்பதற்க்காக வாதாட முன் வந்தான். "எனக்கு உதவி செய்யாதே, நான் வேறு எதாவது செய்து மறுபடியும் சிறைக்குள் தான் இருப்பேன்" என்று கூறி மறுத்து விட்டாள்.

சிறையில் இருந்தபோது அறுபது வயது சிறைக் காவலாளி கூட அவள் அழகைப் பார்த்து ஒருதலையாகக் காதல் கொண்டான். ஏழு வருடங்கள் கழித்து வெளியே வந்தாள். ஆனால் "சிறைப் பறவை"யான அவளுக்கு யாரும் எந்த உதவியும் செய்ய வில்லை. ஒருவரும் அவளிடம் முகம் கொடுத்துக் கூட பேசவில்லை. ஸென் சகோதரர்கள் கூட அவளை வெறுத்து ஒதுக்கி வைத்தனர். ஸென்னின் குறிக்கோளான கருனை, அன்பு, பரிவு வெறும் வார்த்தையாய் போனதால்; யாருடனும் பேசாத, சரியாக சாப்பிடாத அவள் நாளைடைவில் நலிவடைந்து நோய்வாய் பட்டாள்.

ஒரு சமயம் அவளைச் சந்தித்த ஸின்சு பிரிவைச் சார்ந்த புத்த துறவி அவளுக்கு "அமிதாப புத்தாவின், அன்பும் கருணையும்" பற்றி எடுத்துக் கூறினார். அதைக் கேட்டு ஆறுதலும், மனச் சாந்தியும் அடைந்தாள். முப்பது வயதில் இளமையும் அழகுடன் இருக்கும் போதே இறந்து போனாள்.

மிகவும் வருந்திய காலத்தில் ஒரு பெண் கதையாசிரியரிடம் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைக் கூறினாள். அந்தக் கதை ஆசிரியர் அவளுடைய வாழ்க்கையைப் பற்றி புத்தகமாக எழுதினாள். தீரமும், உறுதியும், காதலும், சோகமும் கொண்ட அந்தக் கதை ஜப்பானில் பலராலும் படிக்கப் பட்டது. அவள் உயிரோடு இருந்த போது வெறுத்தவர்கள் கூட அந்தப் புத்தகத்தைப் படித்தப் பின்பு அவளுடைய மறைவுக்கு வருந்திக் கண்ணீர் விட்டனர்.

பிக்ஷுனி ஷுங்-ஷி'யாவின் வாழ்க்கை


ஐந்தாவது மற்றும் ஆறாவது நூற்றாண்டின் இடையில் சைனாவின் லியாங் வம்ச பரம்பரையில் அரசரின் மகளாக பிறந்தவர் ஷுங்-ஷி'யா. அவளது மற்றொரு பெயர் ஸொஜி ஸோங்ஸி. மியோரான் என்பது பிக்ஷுனியான பின் அவளுக்கு கிடைத்த சா'ன் பெயர்.

அவர் போதிதர்மரின் சீடராக சேர்ந்தார். போதிதார்மாவின் நான்கு சிறந்த சீடர்களில் இவரும் ஒருவர். சா'ன் புத்த (மதத்)தில் முதன் முதல்லாக சேர்ந்த பெண் துறவி. டோஜன் ஸென் ஜி இவரைப் பற்றி பெருமையாக தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார். போதிதர்மாவின் போதனைகளை சந்தேகத்திற்கு இடம் இல்லாத வகையில் முழுமையாக அறிந்தவர் என்றும், புத்தரின் தாமரை சூத்திரத்தினை மனப்பாடமாக ஒரு வரிகூட பிழை இல்லாமல் கூறுவதில் வல்லவர் என்றும் கூறியுள்ளார்.

போதிதர்மா இவ்வுலக வாழ்க்கையையில் இருந்து நீங்கும் முன்பு, தனது முக்கிய நான்கு சீடர்களையும் அழைத்து, அவர்கள் தன்னிடமிருந்து கற்று அறிந்ததின் சாரம்சம் என்ன என்றுக் கேட்டார்.

முதலாவதாக டோஃபூ "புத்த வழி என்பது மொழிக்கும் சொல்லுக்கும் அப்பாற் பட்டது, இருந்த போதிலும் மொழியிலிருந்தும் சொல்லிலிருந்தும் வேறு பட்டதல்ல" என்றுக் கூறினார். போதிதர்மா "என்னுடைய (உடலின்) தோலினை புரிந்து கொண்டாய்" என்றார்.

இரண்டாவதாக பிக்ஷுனி ஷுங்-ஷி'யா "அக்சோபியாவின் 'புத்த நிலத்தினை' பேரானந்ததுடன் பார்த்தேன், ஒரு முறை பார்த்த பின்பு, மறுமுறை அதனை பார்க்க முடியாது என்பதனை நான் புரிந்து கொண்டேன்" என்றாள். போதிதர்மா "என்னுடைய (உடலின்) சதையினை எடுத்துக் கொண்டாய்" என்றார்.

முன்றாவதாக டாயாஓ-யூ "நான்கு கருவிகளும் தோற்றத்தில் வெறுமையானவை, ஐந்து பேருண்மைகளும் இயற்கையில் இல்லாத ஒன்று, நான் புரிந்து கொண்ட எதுவும் அடைய முடியாதவை" என்றார். "நீ என்னுடைய எலும்புகளை அறிந்து கொண்டாய்" என்றார் போதிதர்மர்.

கடைசியாக கூஏய்-கோ ஆசிரியருக்கு தலைவணங்கி விட்டு அமைதியாக நின்றார். போதிதர்மா "என்னுடைய இரத்த நாளங்களை இணைக்கும் நரம்புகளை அடைந்தாய்" என்று கூறிவிட்டு தன்னுடைய மேலங்கியையும், திருவோட்டையும் கொடுத்தார். கூஏய்-கோ தான் சீனாவின் சா'ன் புத்த மதத்தின் இரண்டாவது சமய குரு.

பிக்ஷுனி ஷுங்-ஷி'யாவினைப் பற்றி விரிவாக காணக் கிடைக்காவிடிலும், அவரும் சிறந்த நான்கு சிடர்களில் ஒருவராக இருந்தார் என்பது இந்த நிகழ்ச்சியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அன்பும் கருணையும் இல்லை.


சைனாவில் வசித்த ஒரு பாட்டி, துறவி ஒருவனுக்கு இருபது வருடங்கள் உதவி செய்து வந்தாள். துறவிக்காக சிறிய குடிசை போட்டுக் கொடுத்தாள். தியானத்தில் இருந்தவனுக்கு உணவு சமைத்துப் போட்டாள். இத்தனை வருடங்கள் ஆனதே, துறவி எந்த அளவுக்கு தன்னுடைய குறிக்கோளில் முன்னேறியுள்ளான் என்று சோதித்து பார்க்க விரும்பினாள்.

அந்த ஊரில் இருந்த பெண் ஒருத்தியின் உதவியை நாடினாள். அவளிடம், "போய் அவனைக் கட்டி அனைத்துக் கொள்" என்று கூறியவள், பின்பு, "அவனிடம் கேள், 'அடுத்தது என்ன?' என்று" எனச் சொல்லிக் கொடுத்தாள்.

அந்த அழகானப் பெண் குடிசையின் உள்ளே நுழைந்து துறவியை அழைத்தவள், கொஞ்சமும் தாமதியாமல் அவனைக் கட்டி அனைத்துக் கொண்டாள். பின்பு அவனிடம் மோகனமாக இமைகள் துடிக்கப் பார்த்து "அடுத்தது என்ன செய்யப் போகிறாய்?" என்றுக் கேட்டாள்.

"கடும் பனிக் காலத்தில் குளிர்ந்த பாறையில் முதிர்ந்த மரம் வளர்கிறது" என ஒருவகையான கவிதை நயத்துடன் பதில் அளித்தான் அந்த துறவி. பின்பு "எங்கேயாவது கதகதப்பு இருக்கிறாதா?, இல்லை" என்று கேள்வியையும் கேட்டு, பதிலையும் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கூறினான்.

அங்கிருந்து திரும்பிய பெண் பாட்டியிடம் சென்று நடந்ததைக் கூறினாள்.

அதைக் கேட்டு கோபமடைந்த பாட்டி "அவனுக்கு இருபது வருடங்கள் அடைக்கலம் கொடுத்ததை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது, அவன் உன்னுடைய தேவைகளைப் பார்த்தும் கருனையுடன் ஆறுதல் ஒன்றும் கூறவில்லை, உன்னுடைய உணர்ச்சிகளின் வலியினை உணர்ந்தும் என்ன என்று அனுசரனையாக கேட்கவில்லை. உன்னுடைய காமத்திற்கு அவன் உடன் பட்டிருக்க வேண்டாம், ஆனால் உன்னுடைய மனதின் கவலைக்கு, உணர்ச்சிகளின் தேவைக்கு மருந்தாக பரிவுடன் பேசி இருந்து இருக்கலாம்" என்றுக் கூறியவள் உடனடியாக அருகிலிருந்த குடிசைக்கு சென்று அதனை தீ மூட்டிக் கொளுத்தினாள்.
(சந்நியாசி / ஞானிகள் தங்கள் உணர்ச்சிகளை அடக்கினால் மட்டுமே அந்த நிலையை அடைந்ததாக கருத முடியாது, மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்துக் கொள்ளும் தன்மை வேண்டும் என்பதை உணர்த்தும் கதை.

தன்னை அடக்கினால் மட்டும் போதாது, மற்றவர்களுக்கும் தான் உணர்ந்த நிலையை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இக்கதையில் அந்த வயதான மூதாட்டியின் புத்திசாலித்தனம் என்னை ஆச்சரியப்படுத்தியது.)