வெள்ளி, 30 ஏப்ரல், 2010

அன்பும் கருணையும் இல்லை.


சைனாவில் வசித்த ஒரு பாட்டி, துறவி ஒருவனுக்கு இருபது வருடங்கள் உதவி செய்து வந்தாள். துறவிக்காக சிறிய குடிசை போட்டுக் கொடுத்தாள். தியானத்தில் இருந்தவனுக்கு உணவு சமைத்துப் போட்டாள். இத்தனை வருடங்கள் ஆனதே, துறவி எந்த அளவுக்கு தன்னுடைய குறிக்கோளில் முன்னேறியுள்ளான் என்று சோதித்து பார்க்க விரும்பினாள்.

அந்த ஊரில் இருந்த பெண் ஒருத்தியின் உதவியை நாடினாள். அவளிடம், "போய் அவனைக் கட்டி அனைத்துக் கொள்" என்று கூறியவள், பின்பு, "அவனிடம் கேள், 'அடுத்தது என்ன?' என்று" எனச் சொல்லிக் கொடுத்தாள்.

அந்த அழகானப் பெண் குடிசையின் உள்ளே நுழைந்து துறவியை அழைத்தவள், கொஞ்சமும் தாமதியாமல் அவனைக் கட்டி அனைத்துக் கொண்டாள். பின்பு அவனிடம் மோகனமாக இமைகள் துடிக்கப் பார்த்து "அடுத்தது என்ன செய்யப் போகிறாய்?" என்றுக் கேட்டாள்.

"கடும் பனிக் காலத்தில் குளிர்ந்த பாறையில் முதிர்ந்த மரம் வளர்கிறது" என ஒருவகையான கவிதை நயத்துடன் பதில் அளித்தான் அந்த துறவி. பின்பு "எங்கேயாவது கதகதப்பு இருக்கிறாதா?, இல்லை" என்று கேள்வியையும் கேட்டு, பதிலையும் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கூறினான்.

அங்கிருந்து திரும்பிய பெண் பாட்டியிடம் சென்று நடந்ததைக் கூறினாள்.

அதைக் கேட்டு கோபமடைந்த பாட்டி "அவனுக்கு இருபது வருடங்கள் அடைக்கலம் கொடுத்ததை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது, அவன் உன்னுடைய தேவைகளைப் பார்த்தும் கருனையுடன் ஆறுதல் ஒன்றும் கூறவில்லை, உன்னுடைய உணர்ச்சிகளின் வலியினை உணர்ந்தும் என்ன என்று அனுசரனையாக கேட்கவில்லை. உன்னுடைய காமத்திற்கு அவன் உடன் பட்டிருக்க வேண்டாம், ஆனால் உன்னுடைய மனதின் கவலைக்கு, உணர்ச்சிகளின் தேவைக்கு மருந்தாக பரிவுடன் பேசி இருந்து இருக்கலாம்" என்றுக் கூறியவள் உடனடியாக அருகிலிருந்த குடிசைக்கு சென்று அதனை தீ மூட்டிக் கொளுத்தினாள்.
(சந்நியாசி / ஞானிகள் தங்கள் உணர்ச்சிகளை அடக்கினால் மட்டுமே அந்த நிலையை அடைந்ததாக கருத முடியாது, மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்துக் கொள்ளும் தன்மை வேண்டும் என்பதை உணர்த்தும் கதை.

தன்னை அடக்கினால் மட்டும் போதாது, மற்றவர்களுக்கும் தான் உணர்ந்த நிலையை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இக்கதையில் அந்த வயதான மூதாட்டியின் புத்திசாலித்தனம் என்னை ஆச்சரியப்படுத்தியது.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக