வெள்ளி, 30 ஏப்ரல், 2010

பிக்ஷுனி ரியோனென் வாழ்க்கை

ரியோனென் 1797'ல் பிறந்தவர். புகழ் பெற்ற சமுராய் ஸிங்கனின் பேத்தி. இளம் வயதிலேயே அருமையான கவிதைகள் எழுதுவதில் வள்ளவர். தன்னுடைய பேரழகு மற்றும் கவிதைத் திறமையால் ஜப்பான் அரசியின் உதவிப் பணிப் பெண்ணாக வேலை செய்யும் அரும் பாக்கியம் கிடைத்தது. அவளுடைய திறமையால் பதினேழு வயதிலேயே நல்ல பெயரும் புகழும் சம்பாதித்து இருந்தாள்.

அரசியின் திடிர் மறைவால் ரியோனின் வாழ்க்கை மாற்றம் அடைந்தது. உலக வாழ்க்கையின் நிலை இல்லாத தன்மை அருகில் உள்ள உற்ற நண்பர்களையோ, பாசமான உறவினர்களையோ இழக்கும் போது தான் புலப்படும். ரியோனின் மன நிலை உலகத்தில் உள்ள பந்த பாசங்கள், பிறப்பு இறப்பு என்ற மாய சக்கரத்தின் சுழலில் தான் ஒரு சிறு துறும்பு எனத் தெள்ளத் தெளிவாக அறிவதற்கு அரசியின் மரணம் காரணமாக அமைந்தது. அப்பொழுது தான் ஸென்னில் சேர்ந்து துறவறத்தை மேற்கொள்ள முடிவெடுத்தாள்.

அது சாதரணமான முடிவல்ல, அழுத்தமான உறுதியான இறுதியான முடிவு. ஆனால் ஒரு அழகான இளம்பெண் சன்னியாசினியாக மாறுவதற்கு மற்றவர்கள் சம்மதிக்க வேண்டுமே.

அவளுடைய உறவினர்கள் வற்புறுத்தலால் திருமணம் செய்ய சம்மதித்தாள். ஆனால் மூன்று குழந்தைகள் பெற்றதும் சன்னியாசினி ஆக மாறுவதற்கு ஒத்துக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவாதத்தினை பெற்றுக் கொண்டு திருமணம் செய்து கொண்டாள். 25 வயதில் தன்னுடைய கோரிக்கை நிறைவேறியதும் அவளால் ஒரு நிமிடம் கூட காத்திருக்க முடிய வில்லை. உறவினர், கணவர், குழந்தைகள் அனைவரும் தடுத்த போதும் பந்தங்களிலிருந்து விடுபட்டு, மொட்டை அடித்துக் கொண்டு ரியோன் என்ற புதுப் பெயரினைச் சூட்டிக் கொண்டாள்.

தன்னுடைய புனித பயணத்தை ஆரம்பித்தவள் அங்கிருந்து கிளம்பி ஈடோவில் இருந்த தேட்சுகியுவிடம் சென்று அவருடைய பெண் சீடராக சேர்வதற்கு அனுமதி கேட்டாள். ஒரு கணம் கூட சிந்திக்காமல் அவளுடைய பேரழகைப் பார்த்து அனுமதி தர மறுத்து விட்டார்.

ரியோன் மற்றொரு ஆசிரியர் காகுவோவிடம் சென்று அனுமதி கேட்டாள். அவரும் அவளுடைய அழகு துன்பத்தையும், பிரச்சனைகளையும் தோற்றுவிக்கும் என்று கூறி நிராகரித்து விட்டார்.

அதைக் கேட்ட ரியோன், அங்கிருந்த தகிக்கும் இரும்பினை எடுத்து தன்னுடைய முகத்தினில் தேய்த்துக் கொண்டாள். அன்றிலிருந்து அவளுடைய புற அழகு என்றும் திரும்பிக் கிடைக்காத வகையில் சிதைந்து விட்டது. காகுவோ ரியோனெனை மாணவியாக சேர்த்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சி நடந்ததின் நினைவாக, ரியோன் ஒரு சிறிய கண்ணாடியின் பின்புறத்தில் கவிதை ஒன்றினை எழுதினாள்.

பேரரசிக்கு பணிபுரிந்து நறுமணத்தை எரித்தேன் - என்னுடைய
பேரழகு உடைகளுக்கு வாசனை திரவியத்தையும் தெளித்தேன்
பரதேசியாய் பற்றற்று வீதியிலே அலைந்தேன் - பற்றற்ற
பராரியாய் ஸென்னில் சேர்வதற்கு முகத்தினையும் எரித்தேன்

அதன் பின்பு தன்னொளி பெற்று சிறந்த புத்தத் துறவியாகத் திகழ்ந்தாள்.
ரியோனென் அறுபத்து ஆறு வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து நிர்வாணம் அடையும் தருவாயில் இந்தக் கவிதையினை விட்டு விட்டு சென்றார்.

இளவேனில் மாறுவதை இந்தக் கண்களும்
அறுபத்து ஆறு முறை பார்த்தன - அந்த
நிலவோளியின் பேரழகை கேட்காதே
நினைவின்றி பல முறை சொன்னேன் - இந்த
பைந்தென்றல் பாரினிலே வீசாத போதும்
பைன், சிடாரின் பேச்சினையேக் கேள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக