வெள்ளி, 30 ஏப்ரல், 2010

பிக்ஷுனி ஸுங்கோயின் வாழ்க்கை.


இளமையும் அழகும் மிகுந்த ஸுங்கோயின் மற்றொரு பெயர் ஸுசு. மற்றவர்களின் தொந்தரவால் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டாள். பின்பு மணமுறிவு (விவாகரத்து) எற்பட்ட போது, கல்லூரிக்குச் சென்று தத்துவம் பயின்றாள்.

அழகான ஸுங்கோவைப் பார்த்த யாரும் காதல் வயப்பட்டனர். அவளும் மற்றவர்களின் மீது காதல் வயப்பட்டாள். காதல் வயப்பட்டவளுக்கு தத்துவம் நிறைவைத் தரவில்லை. மடத்திற்கு சென்று ஸென் கற்றுக் கொள்ள முயன்றாள். ஆனால் அங்கிருந்த மாணவர்கள் அவள் மேல் காதல் வயப்பட்டனர். காதல், காதல்.. காதல் மூச்சு தினறும் அளவிற்கு காதல்.

அங்கிருக்கப் பிடிக்காமல் கியோடோ நகரத்திற்கு சென்று உண்மையான ஸென் துறவிகளுக்குரிய திடமும் உறுதியுடனும் இடைவிடாது பயிற்சியும், தியானமும் செய்தாள். கெனின் கோயிலில் இருந்த மற்ற சகோதரர்கள் அவளுடைய உறுதியைக் கண்டு வியந்தனர். புகழ்ந்தனர். அவர்களில் ஒருவன் மிகவும் உயர்ந்த நோக்கத்துடன் ஸென்னைப் பற்றியும், அவள் தன்னொளி பெறுவதற்கான வழியையும் சொல்லிக் கொடுத்தான்.

கென் கோயிலின் சமய குருவாக இருந்தவர் மொகுராய். "அமைதியான இடி" என்றுக் கூறப் படுபவர். கடுமையானவர். கோயிலின் விதிகள் அனைத்தும், புத்த தர்மங்கள் அனைத்தும் தெரிந்த அவர், மற்றவர்களுக்கு அதனைக் கூறாமல் தனக்குள்ளேயே வைத்திருந்தார். ஜப்பான் நாகரிகமாக மாறிய போது ஒரு சில துறவிகளும் அதற்கு ஏற்றவாறு மாறினர். பூஜை செயவதற்காக இருக்கும் தலைமைத் துறவி, நவ நாகரிக உலகில் மயங்கி திருமணம் செய்து கொண்டவர். மற்ற சில துறவிகளும் திருமணம் புரிந்து கொண்டனர். மொகுராய் அதனைக் கடுமையாக எதிர்த்தார்.

இந்தக் கோயிலில் இருந்த தலைமைத் துறவியின் மனைவி, ஸுங்கோவின் ஒழுக்கம், உறுதியுடன் செய்கின்ற பயிற்சி, ஆண்கள் அனைவரும் திரும்பிப் பார்க்கும் அழகு ஆகியவற்றைக் கண்டு பொறாமைக் கொண்டாள். அந்த பொறாமை என்ற அரிப்பினால், ஸுங்கோவின் மீது கட்டுக் கதை எற்றி அவளையும், அவளுக்கு உதவி செய்த மற்ற துறவியையும் இணைத்து, பழி சுமற்றினாள். அதணால் விசாரிக்காமல் ஸுங்கோ கோயிலிலிருந்து வெளியே துரத்தப் பட்டாள்.

"நான் முன்பு தவறு செய்து இருக்கலாம், ஆனால் எந்த தவறும் செய்யாத என்னுடைய நண்பனைப் பற்றி அவதூறு கூறிய தலைமைத் துறவியின் மனைவி இனி இந்தக் கோயிலில் வசிக்கக் கூடாது" என்று நினைத்தவள் 500 ஆண்டுகால பழைமை வாய்ந்த அந்தக் கோயிலிற்கு தீ வைத்து தரை மட்டம் ஆக்கினாள்.

மறுநாள் காவலாளிகள் அவளைக் கைது செய்து சிறை வைத்தனர். ஒரு இளம் வயது வக்கில் அவளுக்கு சிறைத் தண்டனையை குறைப்பதற்க்காக வாதாட முன் வந்தான். "எனக்கு உதவி செய்யாதே, நான் வேறு எதாவது செய்து மறுபடியும் சிறைக்குள் தான் இருப்பேன்" என்று கூறி மறுத்து விட்டாள்.

சிறையில் இருந்தபோது அறுபது வயது சிறைக் காவலாளி கூட அவள் அழகைப் பார்த்து ஒருதலையாகக் காதல் கொண்டான். ஏழு வருடங்கள் கழித்து வெளியே வந்தாள். ஆனால் "சிறைப் பறவை"யான அவளுக்கு யாரும் எந்த உதவியும் செய்ய வில்லை. ஒருவரும் அவளிடம் முகம் கொடுத்துக் கூட பேசவில்லை. ஸென் சகோதரர்கள் கூட அவளை வெறுத்து ஒதுக்கி வைத்தனர். ஸென்னின் குறிக்கோளான கருனை, அன்பு, பரிவு வெறும் வார்த்தையாய் போனதால்; யாருடனும் பேசாத, சரியாக சாப்பிடாத அவள் நாளைடைவில் நலிவடைந்து நோய்வாய் பட்டாள்.

ஒரு சமயம் அவளைச் சந்தித்த ஸின்சு பிரிவைச் சார்ந்த புத்த துறவி அவளுக்கு "அமிதாப புத்தாவின், அன்பும் கருணையும்" பற்றி எடுத்துக் கூறினார். அதைக் கேட்டு ஆறுதலும், மனச் சாந்தியும் அடைந்தாள். முப்பது வயதில் இளமையும் அழகுடன் இருக்கும் போதே இறந்து போனாள்.

மிகவும் வருந்திய காலத்தில் ஒரு பெண் கதையாசிரியரிடம் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைக் கூறினாள். அந்தக் கதை ஆசிரியர் அவளுடைய வாழ்க்கையைப் பற்றி புத்தகமாக எழுதினாள். தீரமும், உறுதியும், காதலும், சோகமும் கொண்ட அந்தக் கதை ஜப்பானில் பலராலும் படிக்கப் பட்டது. அவள் உயிரோடு இருந்த போது வெறுத்தவர்கள் கூட அந்தப் புத்தகத்தைப் படித்தப் பின்பு அவளுடைய மறைவுக்கு வருந்திக் கண்ணீர் விட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக