வெள்ளி, 30 ஏப்ரல், 2010

பிக்ஷுனி ஷுங்-ஷி'யாவின் வாழ்க்கை


ஐந்தாவது மற்றும் ஆறாவது நூற்றாண்டின் இடையில் சைனாவின் லியாங் வம்ச பரம்பரையில் அரசரின் மகளாக பிறந்தவர் ஷுங்-ஷி'யா. அவளது மற்றொரு பெயர் ஸொஜி ஸோங்ஸி. மியோரான் என்பது பிக்ஷுனியான பின் அவளுக்கு கிடைத்த சா'ன் பெயர்.

அவர் போதிதர்மரின் சீடராக சேர்ந்தார். போதிதார்மாவின் நான்கு சிறந்த சீடர்களில் இவரும் ஒருவர். சா'ன் புத்த (மதத்)தில் முதன் முதல்லாக சேர்ந்த பெண் துறவி. டோஜன் ஸென் ஜி இவரைப் பற்றி பெருமையாக தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார். போதிதர்மாவின் போதனைகளை சந்தேகத்திற்கு இடம் இல்லாத வகையில் முழுமையாக அறிந்தவர் என்றும், புத்தரின் தாமரை சூத்திரத்தினை மனப்பாடமாக ஒரு வரிகூட பிழை இல்லாமல் கூறுவதில் வல்லவர் என்றும் கூறியுள்ளார்.

போதிதர்மா இவ்வுலக வாழ்க்கையையில் இருந்து நீங்கும் முன்பு, தனது முக்கிய நான்கு சீடர்களையும் அழைத்து, அவர்கள் தன்னிடமிருந்து கற்று அறிந்ததின் சாரம்சம் என்ன என்றுக் கேட்டார்.

முதலாவதாக டோஃபூ "புத்த வழி என்பது மொழிக்கும் சொல்லுக்கும் அப்பாற் பட்டது, இருந்த போதிலும் மொழியிலிருந்தும் சொல்லிலிருந்தும் வேறு பட்டதல்ல" என்றுக் கூறினார். போதிதர்மா "என்னுடைய (உடலின்) தோலினை புரிந்து கொண்டாய்" என்றார்.

இரண்டாவதாக பிக்ஷுனி ஷுங்-ஷி'யா "அக்சோபியாவின் 'புத்த நிலத்தினை' பேரானந்ததுடன் பார்த்தேன், ஒரு முறை பார்த்த பின்பு, மறுமுறை அதனை பார்க்க முடியாது என்பதனை நான் புரிந்து கொண்டேன்" என்றாள். போதிதர்மா "என்னுடைய (உடலின்) சதையினை எடுத்துக் கொண்டாய்" என்றார்.

முன்றாவதாக டாயாஓ-யூ "நான்கு கருவிகளும் தோற்றத்தில் வெறுமையானவை, ஐந்து பேருண்மைகளும் இயற்கையில் இல்லாத ஒன்று, நான் புரிந்து கொண்ட எதுவும் அடைய முடியாதவை" என்றார். "நீ என்னுடைய எலும்புகளை அறிந்து கொண்டாய்" என்றார் போதிதர்மர்.

கடைசியாக கூஏய்-கோ ஆசிரியருக்கு தலைவணங்கி விட்டு அமைதியாக நின்றார். போதிதர்மா "என்னுடைய இரத்த நாளங்களை இணைக்கும் நரம்புகளை அடைந்தாய்" என்று கூறிவிட்டு தன்னுடைய மேலங்கியையும், திருவோட்டையும் கொடுத்தார். கூஏய்-கோ தான் சீனாவின் சா'ன் புத்த மதத்தின் இரண்டாவது சமய குரு.

பிக்ஷுனி ஷுங்-ஷி'யாவினைப் பற்றி விரிவாக காணக் கிடைக்காவிடிலும், அவரும் சிறந்த நான்கு சிடர்களில் ஒருவராக இருந்தார் என்பது இந்த நிகழ்ச்சியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக