செவ்வாய், 20 ஏப்ரல், 2010

புல்லும், மரமும் அறிவு ஜீவியா?

காமகுரா காலத்தில் ஷிங்கன் என்பவன் டெண்டாய் என்ற புத்தரின் மாகாயான தாமரை சூத்திரங்களை பற்றி ஆறு வருடமும், ஸென் பற்றி ஏழு வருடங்களும் படித்தான். அதன் பிறகு சைனாவிற்கு சென்று முழுமூச்சுடன் ஸென் பற்றி பதிமூன்று வருடங்கள் பயிற்சி செய்தான்.

ஜப்பான் திரும்பிய ஷிங்கனைப் பார்ப்பதற்கு பலர் வந்தனர். அவனிடம் கேள்விகளும், பேட்டிகளும் எடுப்பதற்கு பலர் முனைந்தனர். ஆனால் பார்வையாளர்களின் வினாக்களுக்கு எப்பொழுதாவது தான் பதில் அளித்தான். பல சமயங்களில் பதில் கூறுவதை தவிர்த்தான்.

ஒரு நாள் ஐம்பது வயதான தன்னொளி பற்றி பயின்ற மாணவன் ஒருவன் ஷிங்கனைப் பார்த்து "நான் சிறு வயதிலிருந்து சிந்தனையைக் கிளரும் டெண்டாய் பள்ளியில் படித்து வருகிறேன். ஆனால் என்னால் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள முடிய வில்லை. புல்லும், மரங்களும் கூட தன்னொளியான அறிவு ஞானத்தை பெறுவதாக டெண்டாய் கூறுகிறது. எனக்கு அதனைக் கேட்பதற்கே வித்தியாசமாக இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறிர்கள்?" என்று கேட்டான்.

"புல்லும், மரமும் தன்னொளியை பெறுகின்றனவா இல்லையா என்பதைப் பற்றி விவாதிப்பதில் என்ன பயன் இருக்கிறது?" என்ற ஷிங்கன், அந்த முதிய மாணவனைப் பார்த்து "என்னுடைய கேள்வி என்ன என்றால், நீங்கள் என்றாவது தன்னொளியைப் பெறுவது எப்படி என்று சிந்தித்து இருக்கிறிர்களா?" என்று பதில் வினாவினை எழுப்பினார்.

அதற்கு அந்த முதியவர் "நான் எப்பொழுதும் இந்த விதத்தில் சிந்தித்து பார்க்க வில்லை" என்று வியந்து கூறினார்.
"அப்படியானால் வீட்டிற்கு சென்று என் கேள்வியைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்" என்று கூறி விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார் ஷிங்கன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக