திங்கள், 31 மே, 2010

பில் கேட்ஸ் வாழ்க்கை.

பில் கேட்ஸ் (William Henry Bill Gates III) என்றால் இன்றைய உலகில் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. கடந்த இரண்டுத் தலைமுறைகளில் பில் கேட்ஸ் அளவிற்கு உலக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எவரும் இருக்க முடியாது. உலகின் போக்கையே மாற்றியமைத்துவிட்ட சாதனையாளர். மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலமைக் கணனி மென்பொருளாரும், அதன் தலமை நிறைவேற்று அதிகாரியும் ஆன பில் கேட்ஸின் தற்போதைய வயது 52. உலக பணக்காரர்கள் வரிசையில் “பில் கேட்ஸ்” தொடர்ந்து பல வருடங்களாக முதலிடத்திலேயே இருந்து வருகிறார். 1999 களிலேயே இவரது சொத்தின் மதிப்பு 100 பில்லியன்கள் ஆகும். இன்று இவரது மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் உலகெங்குமாக 78,000 பேர்கள், 105 நாடுகளில் சேவை புரிகின்றனர்.


வாழ்க்கை வரலாறு

பில் கேட்ஸ் 1955 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் நாள் அமெரிக்கா, சியேட்ல், வொசிங்டன் (America, Seattle, Washington) எனும் நகரில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் 'வில்லியம் கெச் கேட்ஸ்' அவர் ஒரு சிறந்த வழக்கறிஞர் ஆவார். தாயாரின் பெயர் 'மேரி மேக்ஸ்வெல்' வொசிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆசிரியை ஆவார். இவர்களின் மகனான பில் கேட்ஸ் சிறு வயதிலேயே கணிதம், அறிவியல் பாடங்களில் சிறந்து விளங்கியுள்ளார். பில் கேட்ஸ் தனது பதி்மூன்றாவது வயதில் சியாடில் பகுதியில் சிறந்தப் பாடசாலையான லேக்சைட் பாடசாலைக்கு மாற்றம் பெற்றார். அங்கு கல்வி கற்கும் காலங்களில் இவரது கணனி ஆர்வமும் திறைமையும் ஆசிரியர்களால் இனங்காணப்பட்டது. சிறு வயது முதலே மென்பொருள் எழுதுவதில் ஆர்வமுள்ளவரானார்.

13 வயதான அக்காலத்திலேயே மென்பொருள் எழுதவும் தொடங்கிவிட்டார்.

1973 ஆம் ஆண்டு ஹாவர்ட் பல்கலைக்கழகம் (Harvard University) சென்றார். அங்கே இஸ்டீவ் பாள்மர் என்பவர் இவரது நண்பரானார். இஸ்டீவ் பாள்மரின் வீட்டில் இருந்தே படித்தார். இருப்பினும் இவரது ஆர்வம் கணனி மென்பொருள் எழுதுவதிலேயே இருந்தது.

1975 ஆம் ஆண்டு ஹாவர்ட் பல்கலைக்கழகக் கல்வி முற்று பெற்றப் பின் தனது சிறு வயது நண்பரான பவுல் எலன் (Paul Allen) என்பவருடன் இணைந்து மைக்ரோசொப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தார். கணனித்துறை பிற்காலத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் எனும் தீர்க்கத்தரிசனம் இவருக்குள் இருந்ததோ என்னவோ, இவரும் இவரது நண்பரும் இணைந்து மென்பொருள்களை மும்முரமாக எழுதினர். இவருடைய இத்தொலை நோக்குச் சிந்தனைத்தான் பிற்காலத்தின் இவருடைய அபார வெற்றிகளுக்கு வழிவகுத்தது எனலாம்.

இன்றை உலகில் சாதாரணக் கணனி பாவனையாளர் முதல் அலுவலகங்கள், நிறுவனங்கள் வரை மைக்ரோசொப்ட்டின் மென்பொருள் இன்றி ஒன்றுமே செய்ய முடியாத அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. கணனி இயங்குத் தளங்களை (ஒப்பரேடிங் சிஸ்டம்) பொருத்தவரையிலும் 85% சதவீதமானவை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இயங்கு தளங்களாகவே உள்ளன. மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் "விண்டோஸ் XP" ஒரு புரட்சியையே ஏற்படுத்திய இயங்கு தளமாகும். மைக்ரோசொப்ட்டின் கடைசியான இயங்குதளமான “விண்டோஸ் விஸ்டா” 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இதனைக் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள், 600 கோடி டொலர்கள் செலவில், 5000 கணனி மென்பொருள் வல்லுநர்கள் உழைப்பில் உருவாகியுள்ளது. இதில் 300 இந்திய கணனி மென்பொருள் வல்லுநர்களும் செயலாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இன்றையக் கணனி உலக நுட்ப வளர்ச்சிக்கும், அறிவியல் மாற்றத்திற்கும் பில் கேட்ஸ் அவர்களின் தனிமனிதத் திறமையும், மைக்ரோசொப்ட் நிறுவனத்தினதும் பங்கும் அளப்பரியது. பொருளாதாரத் துறையை எடுத்துக்கொண்டாலும் இன்றைய உலகின் "பொருளாதாரத் தந்தை" என்று பில் கேட் அவர்களையே குறிப்பிடலாம் என கூறுவோரும் உளர்.


பில் கேட்ஸ் எழுதிய நூல்கள்

பில் கேட்ஸ் "கொலின்ஸ் எமிங்வே" (Collins Hemingway) என்பவரும் சேர்ந்து எழுதிய “Business @ the speed of Thought” எனும் நூல் 25 மொழிகளில் வெளியாகி பெரும் பறப்பறப்பை ஏற்படுத்தியது. இந்நூல் பல பத்திரிக்கைகளினதும் சஞ்சிகைகளினதும் பாராட்டுக்களை பெற்றது. பில் கேட்ஸின் “The Road Ahead' எனும் நூல் 1995 ஆண்டு பிரசுரிக்கப்பட்டு அதுவும் பெரும் பாராட்டினைப் பெற்றது. அதே ஆண்டு நியூயோர்க் டைம்ஸ் செய்தித்தாளில் அதிகம் விற்பனையான நூல்களின் பட்டியலில், தொடர்ந்தும் ஏழு வாரங்கள் முன்னணி நூலாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஒரு தொழிலதிபராக மட்டுமன்றி, எழுத்துலகிலும் தடம் பதித்தவர் பில் கேட்ஸ்.

இந்நூல்கள் மூலம் இவர் பெற்ற இலாபத்தை தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும், இலாப நோக்கற்று இயங்கும் நிறுவனங்களிற்கும் நன்கொடையாகக் கொடுத்தார்.

இவற்றைத் தவிர உலகம் முழுவதும் வாழும் மக்களின் கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்திக்கான நிறுவனம் ஒன்றைத் திறந்து அதற்கு பல பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டு பணியாற்றியும் வருவதாக செய்திகள் கூறுகின்றன. இந்நிறுவனத்திற்கு "பில் எண்ட் மெலிண்டா கேட் பவுண்டேசன்” எனப் பெயரிட்டுள்ளார். "மெலிண்டா" என்பது இவரது துணைவியாரின் பெயராகும்.

வியாழன், 6 மே, 2010

நான்தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவனாக(SPECIAL) மாற வேண்டும் என்பதை எப்படி நிறுத்துவது?

ஏற்கனவே நீ தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவன்தான். எனவே தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவனாக மாற வேண்டிய அவசியமில்லை. நீ தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவன். நீ தனித்தன்மை கொண்டவன். – கடவுள் அதைவிட குறைவாக எதையும் எப்போதும் உருவாக்குவதில்லை. ஒவ்வொருவரும் முழுமையாக தனித்தன்மை கொண்டவர்கள். உன்னைப் போன்ற ஒரு மனிதன் முன்பும் இருந்ததில்லை. உன்னைப் போன்ற ஒரு மனிதன் உனக்கு பின்பும் ஒருபோதும் இருக்க போவதில்லை. கடவுள் இந்த வடிவத்தை முதலும் கடைசியுமாக எடுத்திருக்கிறார். எனவே தனிப்பட்ட சிறப்பு உடையவனாக மாற முயற்சி செய்ய வேண்டியதில்லை. நீ ஏற்கனவே அப்படித்தான் இருக்கிறாய். நீ தனிப்பட்ட சிறப்புடையவனாக மாற முயற்சி செய்தால் நீ சாதாரணமாகி விடுவாய். உன்னுடைய முயற்சி தவறான புரிதலில் வேர் கொண்டுள்ளது. அது குழப்பத்தை உண்டு பண்ணும். ஏனெனில் நீ தனிப்பட்ட சிறப்புடையவனாக முயற்சி செய்யும்போது நீ ஒரு விஷயத்தை ஏற்கனவே முடிவு செய்துவிட்டாய். அது என்னவெனில் நீ தனிப்பட்ட சிறப்புடையவன் அல்ல என்பதே. நீ ஏற்கனவே சாதாரணமானவனாகி விட்டாய். நீ அந்த புள்ளியை தவற விட்டுவிட்டாய்.
நீ சாதாரணமானவன் என்பதை நீ ஒருமுறை முடிவு செய்து விட்டால், நீ எப்படி தனிப்பட்ட சிறப்புடையவனாக முடியும்?
நீ அதையும், இதையும் முயற்சி செய்வாய்! நீ சாதாரணமானவனாகவே இருப்பாய். ஏனெனில் உனது அடித்தளம், உனது அஸ்திவாரம் தவறானது. நீ தையல்காரனிடம் சென்று மேலும் சிக்கலான ஆடைகளை தைத்துக் கொள்ளலாம். உன்னுடைய தலை அலங்காரத்தை நீ திரும்பவும் செய்து கொள்ளலாம். நீ அழகு பொருட்களை உபயோகப்படுத்தலாம். நீ ஒரு சில விஷயங்களை கற்றுக் கொண்டு மேலும் அறிவாளியாகலாம். நீ வரைந்துவிட்டு நீ ஒவியன் என எண்ணிக் கொள்ளலாம். நீ ஒரு விஷயத்தை செய்து புகழடையலாம். ஆனால் அடி ஆழத்தில் நீ சாதாரணமானவன் என்பதை நீ அறிவாய். இவை அனைத்து விஷயங்களும் வெளியில் உள்ளன. நீ எப்படி உனது சாதாரண ஆத்மாவை அசாதாரண ஆத்மாவாக மாற்றமுடியும்? அதற்கு வழியே இல்லை.
கடவுள் எந்த வழியும் கொடுக்கவில்லை. ஏனெனில் அவர் ஒருபோதும் சாதாரண ஆத்மாக்களை படைத்ததில்லை. எனவே அவர் உன் பிரச்சனையை குறித்து யோசிக்க இயலாது. அவர் உனக்கு தனிப்பட்ட அசாதாரணமான ஆத்மாவை அளித்துள்ளார். அவர் ஒருபோதும் வேறுயாருக்கும் அதனை அளித்ததில்லை. இது உனக்காகவே உருவாக்கப்பட்டது.
நான் உன்னிடம் சொல்ல விரும்புவது என்னவென்றால் உன் தனிப்பட்ட சிறப்பை சரியாக அடையாளம் கண்டுகொள். அதனை பெற வேண்டிய அவசியமில்லை, அது ஏற்கனவே அங்கு உள்ளது. அதனை அடையாளம் கண்டுகொள். உனக்குள் சென்று அதனை உணர். யாருடைய கைரேகையும் உன்னுடைய கைரேகை போன்றதல்ல. கைரேகை கூட இல்லை! யாருடைய கண்ணும் உன்கண்களை போன்றதல்ல, யாருடைய குரலும் உன்னைப் போன்றதல்ல, யாருடைய வாசனையும் உன்னை போன்றதல்ல. நீ ஒரு அப்பட்டமான தனிவிதி. உன்னை போன்ற இரண்டாவது ஆள் எங்கும் இல்லை. இரட்டை குழந்தைகள்கூட வித்தியாசமாகத்தான் இருக்கின்றன. எவ்வளவுதான் ஒன்றுபோல தெரிந்தாலும், அவர்கள் வித்தியாசமாக இருக்கிறார்கள். அவர்கள் வெவ்வேறு வழிகளில் செல்கிறார்கள். அவர்கள் மாறுபட்ட வழிகளில் வளர்கிறார்கள். இவர்கள் மாறுபட்ட தனித்தன்மையை பெறுகின்றனர்.
இந்த அடையாளம் காணுதல் தேவை.
நீ கேட்கிறாய்! நான் தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவனாக மாறவேண்டும் என்பதை எப்படி நிறுத்துவது,
வெறுமனே உண்மையை கேள். உன்னுடைய இருப்பினுள் சென்று பார். தனிப்பட்ட சிறப்புடையவனாய் இருக்கும் முயற்சி மறைந்துவிடும். நீ தனிப்பட்ட சிறப்புடையவன் என்பதை நீ அறியும்பொழுது முயற்சி நின்றுவிடும். நீ “நான் ஏதாவது ஒரு முறையை கொடுக்கவேண்டும். அதன்மூலம் தனிப்பட்ட சிறப்புடையவனாக இருப்பதை நிறுத்திவிடலாம்” என விரும்பினால், பிறகு அந்த முறை தொந்தரவு ஏற்படுத்தும். திரும்பவும் நீ ஏதோ ஒன்று செய்ய முயற்சிக்கிறாய். திரும்பவும் நீ ஏதோ ஒன்றாக முயற்சிக்கிறாய். முதலில் தனிப்பட்ட சிறப்புடையவனாய் இருக்கமுயற்சி செய்தாய். இப்போது தனிப்பட்ட சிறப்புடையவனாய் இல்லாதிருக்க முயற்சி செய்கிறாய். ஆனால் முயற்சிக்கிறாய்....முயற்சிக்கிறாய். ஏதோ ஒரு வழியில் மேம்படுத்த முயற்சிக்கிறாய். ஆனால் நீயாக இருப்பதை நீ ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை.
என்னுடைய முழு செய்தியும் நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே உன்னை ஏற்றுக் கொள். ஏனெனில் கடவுள் அதனை ஏற்றுக்கொள்கிறார். கடவுள் உனக்கு மதிப்பளிக்கிறார், நீ உனது இருப்பிற்கு இன்னும் மதிப்பளிக்கவில்லை. கடவுள் உன்னைப் போல இருப்பதை தேர்ந்தெடுத்திருக்கிறார் என அதிக ஆனந்தம் கொள். கடவுள் இருப்பதற்கு உன்னை தேர்ந்தெடுக்கிறார், அவருடைய உலகத்தை பார்ப்பதற்கு, அவருடைய இசையை கேட்பதற்கு, அவருடைய நட்சத்திரங்களை பார்ப்பதற்கு, அவருடைய மக்களை பார்ப்பதற்கு, நேசிப்பதற்கு, நேசிக்கப்படுவதற்கு – இன்னும் உனக்கு என்ன வேண்டும்? கொண்டாடு! நான் திரும்ப திரும்ப கூறுகிறேன், விழிப்புணர்வுடன் அதனை கொண்டாடு.! அந்த விழிப்புணர்வுடன் கூடிய கொண்டாட்டத்தில் மெதுமெதுவாக, நீ தனிப்பட்ட சிறப்புடையவன் என்பது உனக்குள் மின்னலைப் போல வெடிக்கும்.
ஆனால் நினைவில் கொள். அது மற்றவர்களோடு ஒப்பிட்ட அகங்காரமாக இருக்காது. இல்லை - அந்த நொடியில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட சிறப்புடையவர்கள் என்பதை நீ அறிவாய். யாரும் சாதாரணமானவர்கள் அல்ல.
எனவே இதுதான் வரையறை. நீ நான் தனிப்பட்ட சிறப்புடையவன் என நினைத்தால், அந்த ஆணை விடவும், அந்த பெண்ணை விடவும் சிறப்புடையவன் என நினைத்தால் நீ இன்னும் புரிந்துகொள்ளவில்லை. அது ஆணவத்தின் விளையாட்டு. ஒப்பிட்டு பார்த்துவருவது தனிப்பட்ட சிறப்பல்ல. யாரோடும் ஒப்பிடுவதால் வருவது சிறப்பல்ல. நீ இருப்பதை போலவே இருப்பதுதான் தனிப்பட்ட சிறப்பு.
ஒரு ஜென் குரு கேட்கப்பட்டார். ஒரு பேராசிரியர் அவரை பார்ப்பதற்கு வந்திருந்தார். அப்போது கேட்டார், “நான் ஏன் உங்களை போல இல்லை? இதுதான் என்னுடைய ஆசை! நான் ஏன் உங்களை போல இல்லை? நான் ஏன் உங்களை போல மெளனமாக இல்லை? நான் ஏன் உங்களை போல ஞானம் பெறவில்லை?”
குரு, “காத்திரு, மெளனமாக அமர்ந்திரு. கவனி, என்னை கவனி, உன்னை கவனி, மற்ற அனைவரும் சென்றபிறகு அப்போதும் கேள்வி இருந்தால் நான் அதற்கு பதிலளிக்கிறேன்.” என கூறினார். முழுநாளும் மக்கள் வந்து சென்றவண்ணம் இருந்தனர், சீடர்கள் கேள்வி கேட்டனர். பேராசிரியர் மிக மிக அமைதியிழந்துகொண்டிருந்தார். – நேரம் வீணாகிக் கொண்டிருக்கிறது. இந்த மனிதர் எல்லோரும் சென்றபிறகு என்று கூறியுள்ளார். பிறகு சாயங்காலம் வந்து விட்டது. இப்போது யாருமில்லை. போராசிரியர் இப்போது, “இதுபோதும், நான் நாள் முழுவதும் காத்துக் கொண்டிருந்தேன். என்னுடைய கேள்வி என்னவாயிற்று?” எனக் கேட்டார்.
நிலவு வெளிவந்துகொண்டிருந்தது, அது ஒரு பௌணர்மி இரவு. குரு, “இன்னும் உனக்கு விடை கிடைக்கவில்லையா?” எனக் கேட்டார்.
பேராசிரியர், “ஆனால் நீங்கள் இன்னும் என் கேள்விக்கு பதிலளிக்க வில்லையே” எனக் கேட்டார்.
குரு சிரித்தார், “நான் பலரும் கேட்ட கேள்விக்கு முழு நாளும் விடையளித்துக் கொண்டிருந்தேன். நீ கவனித்திருந்தால் புரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் வா, நாம் தோட்டத்திற்கு போகலாம். தோட்டத்தில் முழு நிலவு உள்ளது. மற்றும் இது ஒரு அழகான இரவு,”. அங்கு குரு அவரை பார்த்து கூறினார். “இந்த மரத்தை பார், ஒரு மரம் ஓங்கி உயர்ந்து வளர்ந்துள்ளது, கிட்ட தட்ட நிலவை தொடும் அளவிற்கு வளர்ந்துள்ளது. நிலவு அதன் கிளைகளுடன் பின்னியுள்ளது. இந்த சிறிய குத்து செடிகளை பார்.”
ஆனால் பேராசிரியர், “நீங்கள் எதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் என்னுடைய கேள்வியை மறந்து விட்டீர்களா?” எனக் கேட்டார்.
குரு, “நான் உங்களுடைய கேள்விக்குதான் பதிலளித்து கொண்டிருக்கிறேன். என்னுடைய தோட்டத்தில் இந்த மரமும் இந்த குத்துசெடியும் வருடகணக்காக இருக்கின்றன. இந்த குத்துசெடி, இந்த மரத்தை பார்த்து நான் ஏன் உன்னைப் போல இல்லை என்றோ, இந்த மரம் இந்த குத்துசெடிகளை பார்த்து நான் ஏன் உன்னைப் போல இல்லை என்றோ கேட்டு நான் பார்த்ததில்லை. மரம் மரமாக இருக்கிறது. குத்துசெடி குத்துசெடியாக இருக்கிறது. அவை இரண்டும் அவைகளாக இருப்பதிலேயே மகிழ்ச்சியாக இருக்கின்றன.” எனக் கூறினார்.
நான் நானாக இருக்கிறேன், நீ நீயாக இருக்கிறாய். ஒப்பிடுதல் பிரிவினையை கொண்டுவருகிறது. ஒப்பிடுதல் குறிக்கோளை கொண்டு வருகிறது, ஒப்பிடுதல் நகல் தன்மையை கொண்டு வருகிறது. நான் ஏன் உங்களைப் போல இல்லை என நீ கேட்டால் பிறகு நீ என்னைப் போல இருக்க தொடங்குவாய். அது உனது முழு வாழ்க்கையையும் வாழாமல் இருப்பதாகும். நீ நகல்தன்மை உடையவனாகிறாய், ஒரு நகலாக ஆகிவிடுவாய். நீ நகல்தன்மை உடையவனாக ஆகும்போது நீ உன்மேல் உனக்கு இருக்கும் எல்லா சுயமரியாதையையும் இழந்துவிடுவாய்.
தன்னை மதிக்கும் ஒரு மனிதரை கண்டுபிடிப்பது மிகவும் அபூர்வம். ஏன் அது மிகவும் அபூர்வமாக உள்ளது ஏன் வாழ்வுக்கு மதிப்பு இல்லை – உன்னுடைய சொந்த வாழ்விற்க்கு மதிப்பு இல்லை உன்னுடைய சொந்த வாழ்க்கைக்கு நீயே மதிப்பளிக்கவில்லை எனில் மற்றவர்களுக்கு எப்படி மதிப்பு இருக்கும் உன்னுடைய சொந்த இருப்பை நீ மதிக்கவில்லை எனில் நீ எப்படி ரோஜா இதழை, பைன் மரத்தை, மற்றும் நிலவை, மக்களை மதிக்க முடியும்?
நீ எப்படி உன்னுடைய குருவை, தந்தையை, தாயை, நண்பரை, உனது மனைவியை, கணவரை மதிக்க முடியும்? நீ உன்னை மதிக்காதபோது, உனது குழந்தைகளை எப்படி மதிக்கமுடியும்?
தன்னை மதிக்கும் ஒரு மனிதரை காண்பது மிகவும் அபூர்வம்.
ஏன் அது மிகவும் அபூர்வமாக உள்ளது? – ஏனெனில் உனக்கு நகலாக இருக்க சொல்லிக் கொடுக்கப் பட்டுள்ளது – சிறு வயதிலிருந்தே ஏசுவைப் போல இரு அல்லது புத்தரைப் போல இரு என சொல்லிக் கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் ஏன் புத்தரைப் போல ஆக வேண்டும்? புத்தர் உன்னைப் போல ஆக வில்லை, புத்தர் புத்தராக இருந்தார். ஏசு ஏசுவாக இருந்தார். கிருஷ்ணர் கிருஷ்ணராக இருந்தார். நீ ஏன் கிருஷ்ணரைப் போல ஆக வேண்டும்? நீ என்ன தவறு செய்தாய்? நீ என்ன பாவம் செய்தாய்? நீ ஏன் கிருஷ்ணரைப் போல ஆக வேண்டும்? கடவுள் ஒருபோதும் இன்னொரு கிருஷ்ணரைப் படைக்கவில்லை. அவர் ஒருபோதும் இன்னொரு புத்தரைப் படைக்கவில்லை. இன்னொரு ஏசு - ஒருபோதும் இல்லை ஏனெனில் அவர் திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை படைக்க விரும்புவதில்லை. அவர் ஒரு படைப்பாளி. அவர் ஒரு வரிசைகிரமமாக படைப்பவர் அல்ல – ஒரு கார் வருகிறது, அதே கார் இன்னொன்று, இன்னொன்று என கார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. எல்லாம் ஒன்று போலவே வரிசைகிரமமாக வருகின்றன. கடவுள் வரிசைகிரமமாக படைப்பவர் அல்ல. அவர் உண்மையான படைப்பாளி. அவர் ஒருபோதும் அதே விஷயத்தை திரும்ப படைப்பதில்லை.
அதே விஷயம் மதிப்புடையதாக இருக்காது. நினைத்துப் பாருங்கள். ஒரு கிருஷ்ணர் திரும்பவும் நடக்கிறார். அதே விதமான மனிதன். அவர் ஒரு கோமாளியை போல தோற்றமளிப்பார். அவர் ஒரு சர்க்கசில் மட்டுமே இடம் பெறுவார். வேறு எங்குமல்ல, ஏனெனில் திரும்ப படைக்கப் பட்டவர். அவர் திரும்பவும் கீதையை கூறுவார் – அர்ச்சுனன் இருக்கிறானோ, இல்லையோ, மகாபாரத போர் நடக்கிறதோ இல்லையோ – ஆனால் அவர் கீதையை திரும்ப சொல்லியாக வேண்டும். அவர் அவருடைய ஆடைகளோடு நடப்பார். அது மிகவும் பொருத்தமற்று காட்சியளிக்கும்.
ஏசு உங்களிடையே இருந்தால், திரும்பவும் வந்தால் எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள். அவர் பொருந்த மாட்டார். அவர் காலாவதியானவராக இருப்பார். அவர் காட்சிப் பொருளாக இருப்பார். அவர் அருங்காட்சியகத்தில் மட்டுமே உபயோகமாக இருப்பார். வேறு எங்குமல்ல.
கடவுள் ஒருபோதும் ஒரு விஷயத்தை திரும்ப செய்வதில்லை. ஆனால் நீ எப்போதும் வேறொருவராக மாற கற்றுக் கொடுக்கப் படுகிறாய். வேறொருவராக மாறு, பக்கத்து வீட்டுப் பையனை போல மாறு எவ்வளவு புத்திசாலிதனமாக இருக்கிறான் அவன் என்று பார். அந்த பெண்ணை பார் எவ்வளவு அழகாக நடக்கிறாள்! அதுபோல இரு. நீ எப்போதும் மற்றவரை போல இருக்கவே கற்றுக் கொடுக்கப் படுகிறாய். நீ நீயாக இரு என யாரும் உனக்கு சொன்னதில்லை. உன்னுடைய இருப்பின் மேல் மரியாதை கொள். அது கடவுளின் பரிசு!
ஒருபோதும் நகலாகாதே. அதைத்தான் நான் உனக்கு சொல்கிறேன். ஒருபோதும் நகலாகாதே. நீ நீயாக இரு! அந்த அளவிற்கு கடவுளிடம் நீ கடன் பட்டிருக்கிறாய். நீ நீயாக இரு. நீ ஆணித்தரமாக நீயாக இரு. பிறகு நீ தனிச் சிறப்பு வாய்ந்தவன் என்பதை நீயே அறிவாய். கடவுள் உன்னை அளவுக்கதிகமாக நேசிக்கிறார். அதனால்தான் நீ இருக்கிறாய். அதனால்தான் நீ உருவாகி இருக்கிறாய். இல்லாவிடில் நீ உருவாகி இருக்க மாட்டாய். அவர் உன்னை மிகவும் நேசிக்கிறார் என்பதற்கு அடையாளம் அது.
ஆனால் உன்னுடைய தனிச்சிறப்பு மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பதனால் வருவதல்ல. நீ உன்னுடைய பக்கத்து வீட்டுக் காரர்களை விடவும், நண்பர்களை விடவும், உன்னுடைய மனைவி அல்லது கணவனை விடவும், சிறந்தவன் என்று பொருளல்ல. நீ தனிச்சிறப்பு கொண்டவன். ஏனெனில் நீ தனித்தன்மை கொண்டவன். ஏனெனில் நீ மட்டுமே இருக்கிறாய். உன்னைப் போல நீ மட்டுமே இருக்கிறாய். அந்த விதத்தில் அந்த புரிதலில் தனித்தன்மை கொண்டவனாக மாறும் முயற்சிகள் மறைந்து விடும்.
நீ தனிச்சிறப்பு கொண்டவனாக மாற மேற்கொள்ளும் உன்னுடைய முயற்சிகள் அனைத்தும் ஒரு பாம்பிற்கு கால் வைப்பதைப் போன்றது. நீ பாம்பை கொன்று விடுவாய். நீ நினைக்கிறாய், உன்னுடைய கருணையின் காரணமாக நீ பாம்பிற்கு கால்களை பொருத்துகிறாய். பாம்பு பாவம்! காலில்லாமல் அது எப்படி நடக்கும்? பாம்பு பூரானின் பார்வையில் விழுந்ததை போல! பூரான் பாம்பை பார்த்து கருணை கொள்கிறது. அது நினைக்கிறது. எனக்கு நூறு கால்கள் உள்ளன. பாம்பு பாவம் பாம்பிற்கு கால்களே இல்லை! அது எப்படி நடக்கும்? அதற்கு ஒரு சில கால்களாவது தேவை. பூரான் அறுவை சிகிச்சை செய்து ஒரு சில கால்கள் பாம்பிற்கு பொருத்தினால் பாம்பை அது கொன்றுவிடும். பாம்பு அது இருப்பதை போலவே நன்றாக இருக்கிறது. அதற்கு கால்கள் தேவை இல்லை.
நீ எப்படி இருக்கிறாயோ, அதுவே நல்லது. இதைத்தான் நான் தன்னுடைய இருப்பிற்கு தரும் மரியாதை என்று கூறுகிறேன். தனக்கு மரியாதை தருவது என்பது ஆணவத்தோடு எந்த சம்பந்தமும் இல்லாதது. நினைவில் கொள். தனக்கு மரியாதை செலுத்துவது சுய மரியாதை அல்ல. தனக்கு மரியாதை செலுத்துவது என்பது கடவுளுக்கு மரியாதை. அது படைத்தவனுக்கு மரியாதை செலுத்துவது. ஏனெனில் நீ ஒரு ஓவியம். ஓவியத்திற்கு மரியாதை செலுத்துவதன் மூலம் நீ ஓவியம் வரைந்தவருக்கு மரியாதை செலுத்துகிறாய்.
மரியாதை செலுத்து, ஏற்றுக் கொள்.! அடையாளம் கண்டு கொள்! இந்த முட்டாள் தனமான தனிச்சிறப்பு வாய்ந்தவனாக மாறும் முயற்சிகள் அனைத்தும் மறைந்து விடும்.

செவ்வாய், 4 மே, 2010

சிங் இஸ் கிங்

அது ஒரு வெள்ளிக்கிழமை, மாலை நேரம்.

டெல்லியின் சர்தார் தெருவில் வார விடுமுறைக்கு எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தனர். கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நிறைந்த அந்தப் பகுதியில் பெயருக்கு ஒன்றிரண்டு சீக்கியர்கள் இருந்தனர். அதில் சரண்சிங்கும் ஒருவர். வெள்ளி மாலையை மசாலா கலந்த தந்தூரி சிக்கனுடன் கொண்டாடுவது அவரது வழக்கம். அன்றும் வழக்கம் போல் தன் சமையலை ஆரம்பித்தார். மசாலா வாசம் மூக்கைத் துளைத்தது. திடீரென, படபடவென்று சிங்கின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. சிக்கனை பங்கு போட நண்பர்கள் யாரோ வந்துவிட்டார்கள் என நினைத்தவாறே கதவைத் திறக்க, அங்கே கிறிஸ்தவ பாதிரியார் நின்றிருந்தார்.

அவரை வரவேற்று விஷயம் என்னவென்று கேட்டார் சிங்.

சற்றே தயக்கத்துடன் பாதிரியார் சொல்ல ஆரம்பித்தார்,"கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வெள்ளிக்கிழமை சிக்கன் உண்ணக் கூடாது. உங்கள் தந்தூரி வாசம் எங்களை சிக்கன் பற்றி எண்ண வைக்கிறது"

ஏதோ உளறுகிறார் என நினைத்த சிங்கை, விதவிதமான கதைகள், பிரசங்கங்களைக் கூறி கிறிஸ்தவராக மாற கட்டாயப்படுத்தினார் பாதிரியார். சிக்கனை நினைத்தபடியே எல்லாவற்றுக்கும் 'சரி' என தலையாட்டிக் கொண்டிருந்த சிங், அதற்கும் தலையாட்டி விட்டார்.

உடனே புனித நீரை எடுத்த பாதர், "சீக்கியராக பிறந்து, சீக்கியராக வளர்ந்த நீங்கள், தேவலாயப் புனித நீர் உங்கள் மீது தெளிக்கப்படுவதன் மூலம் கிறிஸ்தவராகிறீர்கள்" எனக் கூறி நீரைத் தெளித்துவிட்டு கிளம்பினார்.

ரொம்ப நாட்களாய் சிங்கின் தந்தூரியை நினைத்துக் கொண்டு ஜெபம் சொல்லிக் கொண்டு இருந்த கிறிஸ்தவர்கள், இனி நிம்மதியாய் தேவனை ஆராதிக்கலாம் என நிம்மதிக் கொண்டனர்.

அடுத்த வெள்ளி மாலை.

மீண்டும் சிங்கின் தந்தூரி வாசம். கோபமடைந்த கிறிஸ்தவர்கள், பாதிரியாருடன் சிங்கின் வீட்டிற்கு வந்தனர்.

"கத்தோலிக்கராக மாறிவிட்ட நீங்கள், இன்று சிக்கன் சாப்பிடக் கூடாதல்லவா? ஏன் மரபை மீறுகிறீர்கள்?" என பாதிரியார் கேட்க, வந்திருந்த அனைவரையும் அமைதியாய் ஒரு முறை பார்த்த சரண் சிங், பாதிரியாரின் கையிலிருந்த புனித நீரை சிக்கன் மீது தெளித்து,"சிக்கனாகப் பிறந்து, சிக்கனாக வளர்ந்த இந்த ஆன்மா, தேவனின் புனித நீர் தெளிக்கப்படுவதன் மூலம் தக்காளியாகவும், உருளைக் கிழங்காகவும் மாற்றப்படுகிறது" என்று கூறிவிட்டு சிக்கனைக் கையிலெடுத்து சுவைக்கத் தொடங்கினார்.