செவ்வாய், 6 ஏப்ரல், 2010

தத்துவம் தினமும்...


எளிமையாக இருங்கள். எளிமைதான் உன்மையாக வாழக் கற்றுக் கொடுக்கும். மாபெரும் கண்டுபிடிப்புகளுக்குத் தேவையான அறிவைத் தரும் சாவி எளிமையில் தான் அடங்கி இருக்கிறது. நல்லவற்றிற்கு உடனே நம் மனதைத் திறக்கவும், கெட்டதற்கு உடனடியாகவும் நம் மனக்கதவை மூடக்கூடிய சக்தியும், எளிமையாக வாழும்போதுதான் கிடைக்கும். எளிமையாக வாழத்தான் நமக்கு நிறையத் துணிச்சல் வேண்டும். அது இருந்தால் நாம் நினைத்ததை சாதிக்கலாம்.

அன்பு காட்ட எப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தாலும் அதை நழுவ விடாதீர்கள். அதைப் பயன்படுத்துங்கள். மாமிசம் சாப்பிடாத பழக்கம் உங்கள் அன்பிலிருந்து மலர்ந்திருந்தால் அது ஓர் அற்புதமான விஷயம். அகிம்சை, அன்பின் காரணமாக மலர்ந்தபோது பரம தர்மமாகிறது. மத நூல்களைப் படித்து ஒரு சம்பிரதாயத்தை ஏற்று மலர்ந்ததென்றால், அது ஒரு தர்மமல்ல! ஒருவருடைய தோளில் நீங்கள் கைவைத்தால், உங்களது இதயத்தின் அன்பு முழுவதையும் உங்கள் கையின் மூலம் அவருக்கு அனுப்புங்கள். உங்களது முழு உயிரையும் முழு இதயத்தையும் அந்தக் கையில் இணையச் செய்து போகவிடுங்கள். அந்தக் கை மாயமாக வேலை செய்வதைக் கண்டு அதிசயிப்பீர்கள்.

ஒருவரது கண்களைச் சந்திக்கும்போது உங்கள் கண்களில் உங்கள் இதயம் முழுவதையும் கொட்டி விடுங்கள்.
கண்கள் மந்திரம் மாயம் அடைந்து ஒருவருடைய இதயத்தை அசைத்து விடுவதைக் கண்டு அதிசயிப்பீர்கள்.
உங்கள் அன்பு விழிப்படைவது மட்டுமல்ல, மற்றவரது அன்பு விழிப்படைவதற்கும் வழி வகுப்பதாகி விடலாம்.
சரியான முறையில் அன்பு செலுத்தும் மனிதன் ஒருவன் பிறந்தால் இலட்சக்கணக்கான மனிதர்களின் உள்ளத்தில் அன்பு பெருக்கெடுக்கத் துவங்கிவிடும்!.
- ஓஷோ ரஜனீஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக