வியாழன், 8 ஏப்ரல், 2010

“வாழு!”“உணர்வோடு வாழு”.

ஓஷோ சொல்கிறார்,“வாழு!”“உணர்வோடு வாழு”.
நாம் என்ன உணர்வில்லாமலா வாழ்கிறோம்? என்று ஒருவர் கேட்கிறார்.
ஆம். அதிலென்ன சந்தேகம்?
எப்படி அது? மறுபடியும் கேள்வி.
நமக்கு இயற்கையோடு என்ன தொடர்பு இருக்கிறது?
பிரபஞ்ச இயக்கத்தோடு என்ன தொடர்பு இருக்கிறது?
உலகின் இயக்கத்தோடு, உலக வாழ்வின் உண்மை நிலையோடு என்ன தொடர்பு இருக்கிறது?
அப்படியானால் தொடர்பு எதுவும் நமக்கு இல்லை என்கிறீர்களா?
கேள்வி மறுபடியும்.

அப்படியல்ல தொடர்பு இருக்கிறது! நல்லவேளையாக நாம் இன்னும் நூறு சதவீதம் இயந்திரங்களாக வில்லை. ஆனால் அந்தத் தொடர்பு பற்றிய உணர்வு ஒரு சிறிதும் நமது நடவடிக்கைகளில், வாழ்க்கையில் இல்லை என்பதே உண்மை.
நமது வாழ்க்கையாக இருப்பது என்ன?
பணம் சம்பாதிக்கும் குறிக்கோள்
பக்கத்து வீட்டுக்காரனை மிஞ்சும் வேகம்
சமுதாய மதிப்பு பெறுவதற்கான நடிப்பு.
போலி கௌரவத்தை பாதுகாக்கும் முயற்சி
தலைவனை எதிர்பார்க்கும் அடிமைத்தனம்
கட்டுப்பாட்டை மீறும் தயக்கம்
சொல்லிக்கொடுத்த படி வாழும் பணிவு
இப்படி ஒரு இயந்திர மனிதனின்(ROBOT) அனைத்து குணாதிசயங்களும் கொண்டது நமது நல்ல பொறுப்புள்ள
சமூக மனிதனின் வாழ்வு.

ஒரு கம்யூட்டர் எப்படி தனியாக இயங்குகிறதோ, எப்படி அதன் திட்டஅமைப்போ(PROGRAMME) அதன்படி இயங்குகிறதோ, எப்படி அதைவிடப் பெரிய கம்யூட்டருக்குக் கட்டுப்படுகிறதோ, எப்படி அதற்கு அதன் திட்டஅமைப்பிற்கு மேல் எதையும் உணரும் சக்தியில்லையோ, அப்படித்தான் இன்றைய மனிதனின் வாழ்க்கை இருக்கிறது.

தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர்
தனது நண்பனும் பகைவனும் என்ற பத்து பேர்
தனது தொழிலில் ஒரு பத்து பேர்
தனது வீதியில் ஒரு பத்து பேர்
தனது ஜாதியில் ஒரு பத்து பேர்
இந்த ஐம்பது பேரின் நடுவில் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும், பாசமாக, நட்பாக, அன்பாக, வீரனாக, நல்லவனாக, என்று காட்டிக் கொள்வதுமே வாழ்வின் குறிக்கோளாக இருக்கிறது.

இந்த ஐம்பது பேரின் நடுவில் ஏற்படும் அவமானமும், கோபமும், கௌரவமும் மட்டுமே அவனை பாதிக்கின்றன.
மற்றபடி,
உலகின் வெப்பம் உயர்வதோ, கதிர்வீச்சின் ஆபத்தால் கான்ஸர் பெருகிவரும் அபாயமோ, அரசியல்வாதிகள் சுயநலத்தால் உலகத்தின் அழிவு நெருங்கி வருவதோ, அண்டார்டிகாவில் பனி முழுவதும் இவ்வருடம் உருகிய ஆபத்தோ, இலங்கையில் தினமும் பல்லாயிரம் பேர் பரிதவிப்பதோ, அவனுக்கு உரைப்பதில்லை. அவனுக்கு அவனை குழந்தை, கணவன் அல்லது மனைவி மட்டுமே பாதிக்கின்றனர்.
சுவிஸ் வங்கியில் 72 லட்சத்து 80 ஆயிரம் கோடி இந்திய அரசியல்வாதிகளின் சுருட்டல் பணம் சேமிப்பாக இருக்கிறதாம்.
இதில் ஒரு சிறு பங்கே இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன். இந்தப் பணம் இந்திய மக்கள் பணம். இது வந்தால் இந்த பஞ்சமும், பட்டினியும், பள்ளியில்லாக் குறையும் போய்விடும்.

ஆனால் நாம் இதை சிந்தித்துப் பார்த்து போராட மாட்டோம். நமது அறிவில் பக்கத்து வீட்டுக்காரன் நம் வீட்டில் எறிந்த குப்பைக்கு நியாயம் தேடுவதே முக்கியமாக இருக்கிறது.

அதே போல் சூரிய உதயமோ, மறையும் மாலைப் பொழுதின் அழகோ, பௌர்ணமி பிம்பமோ, பூக்களின் மணமோ, அருவிகளின் அழகோ, கடலின் ஆர்ப்பரிப்போ, மனிதனை தொடுவதில்லை. போகுமிடத்திலெல்லாம் போட்டோ எடுத்துக் கொண்டு அடுத்தவரிடம் காட்டி பெருமைப் படும் சிறுமையே அவனிடம் உள்ளது.

பாதையில் அப்போதுதான் கடந்து வந்த ஒரு மரத்தைப் பற்றிக் கேட்டால் அவனுக்குத் தெரியாது. காலையில் சாப்பிட்ட டிபனை மதியம் கேட்டால் தெரியாது. ஆனால் சாகும் வரை போட்டுள்ள திட்டம் பற்றி, கனவு பற்றி, குறிக்கோள் பற்றி, துல்லியமாகத் தெரியும். அதோடு எப்போதும் அதைப் பற்றிய கவலை வேறு அவனுக்கு.

இந்த முழு பிரபஞ்சத்திலும் மனிதனைத் தவிர மற்ற அனைத்தும் பேராசையும், குறிக்கோளும், திட்டமிடலும், முடிவுகளும் இல்லாமலேயே இருக்கின்றன. அவை செய்வது வாழ்தல் மட்டுமே. எந்த குறிப்பிட்ட பாதையும் அமைத்துக்கொள்ளாமல், கருத்தும், கொள்கையும், உயர்வும், தாழ்வும், குறிக்கோளும், கோட்பாடும் இல்லாமல் கணத்துக்கு கணம் வாழ்கின்றன. ஆனாலும் அழகாய் இருக்கின்றன. இசைவாய் இருக்கின்றன. உயிர்துடிப்போடு இருக்கின்றன.

ஏன் மனிதன் மட்டும் தனக்குக் கிடைத்த தன்னுணர்வோடு வாழ்வை நேரடியாக சந்தித்து வாழக் கூடாது?
ஏன் அடிமையாய், தலைவனுக்கோ, கடவுளுக்கோ, கொள்கைக்கோ, குடும்பத்திற்கோ அடிமையாய் வாழ வேண்டும்?

ஏன் பெரும்பான்மை பெண்கள் டிவி சீரியலுக்கும், இளைஞர்கள் சினிமாவுக்கும், ஆண்கள் பணப் போராட்டத்துக்கும், அரசியல்வாதிகள் அதிகார வெறிக்கும், குழந்தைகள் புத்தகச் சுமைக்கும், அடிமையாய் இருந்து மடிய வேண்டும்?

இது ரோபோ வாழ்க்கையல்லவா?
இது இயந்திரமாக வாழ்வது அல்லவா?

இடையில் ஒரு சில கணங்கள் மட்டுமே, அதுவும் வேறு வழியின்றி செக்ஸ், பசி, பயம் எனும் இயற்கை தன் கட்டுப்பாட்டை விட்டுவிடாமல் வைத்திருக்கும் உணர்வுகளால் மட்டுமே மனிதன் இயற்கையோடு இணைந்திருக்கிறான். இதிலிருந்து விடுபட்டு முழு இயந்திரமாகிப் போகும் முயற்சியும் நடக்கிறது.

மூச்சு விடுவது மனிதனின் கையில் இல்லை.
இரத்த ஓட்டம் மனிதனின் கையில் இல்லை.
ஜீரணம் நடப்பது மனிதனின் கையில் இல்லை.
சுரப்பிகள் சுரப்பது மனிதனின் கையில் இல்லை.
இறப்பு மனிதனின் கையில் இல்லை.
இதனால் மட்டுமே இந்தத் தொடர்புகள் தொடர்கின்றன.
மற்றபடி எல்லா உணர்வுகளும் மனதின் கட்டுப்பாட்டில் நடக்கும் நடிப்பாக மாறுகின்றன.
இப்படி மனிதன் இயந்திரமாகிவிட்ட விலையில் வளர்ச்சியோ, ஆன்மீகமோ, நிலைமாற்றமோ ஏது?
இயந்திரங்கள் மேலும் மேலும் சுறுசுறுப்பாக தனது திட்ட அமைப்புபடி செயல்படுமே அல்லாது அதற்கு உணர்வுநிலை வளர்ச்சி ஏது? உணர்வே அற்றதல்லவா அது !
இப்படி இறந்துபோன மனித கூட்டத்திற்கு எதிரானவர் ஓஷோ.

மற்ற சாமியார்களுக்கும் ஓஷோக்கும் என்ன வேறுபாடு என்று ஒரு கேள்வி.
பதில் இதுதான்
மற்ற எல்லா சாமியார்களும், மதங்களும், அமைப்புகளும், உங்கள் திட்ட அமைப்பை(PROGRAMME) உயர்த்த உதவும், அல்லது இருக்கும் திட்ட அமைப்புக்கு பதிலாக வேறு ஒன்றை கொடுக்கும். அவரவர்களுடையதே உயர்ந்ததென்று விளம்பரம் செய்யும், வியாபாரம் செய்யும்.
அந்த திட்ட அமைப்பின் எல்லைகள், படிகள், அதனால் அடையும் குறிக்கோள்கள் எல்லாம் தெளிவாய் இருக்கும்.
ஆனால்
ஓஷோ,
எல்லா திட்ட அமைப்புகளையும் உடைத்தெறி, என்னிடம் எந்த திட்டஅமைப்பும், வழியும், குறிக்கோளும், கட்டுப்பாடும் இல்லை. என்னையும் சேர்த்து விலக்கிவிட்டு உன் வாழ்வை வாழு, என்கிறார்.

இதை தெளிவாக்க ஒரு சம்பவம் சொல்கிறேன்.
ஒரு அன்பர் என்னிடம் வந்து, “எனது நெருங்கிய நண்பன் முதலில் குடிப்பான், செக்ஸில் ஈடுபாடு, கோபப் பட்டு விடுவான், செலவழிக்க தயங்க மாட்டான். அதனால் குடும்பத்தில் பிரச்னை, மற்றவர்களுக்கும் கஷ்டம். மனைவிக்கு நிம்மதியில்லை. உடம்பு கெட்டுபோகிறதே என்ற பயமும், கவலையும் வேறு. இப்படிபட்ட சூழ்நிலையில் இருந்தவன் ஒரு நல்ல ஆன்மீக அமைப்பில் சேர்ந்தான். ரெகுலராக தியானமும் யோகாவும் கற்று வந்தான். இப்போது முற்றிலுமாக மாறிவிட்டான். குடி இல்லை, கோபம் இல்லை. குடும்பத்தில் நிம்மதி. அவனே சந்தோஷமாயிருக்கிறான். தான் இப்படி மாறியதற்கு யோகாசனம் செய்ததும், அவர்கள் கற்றுத் தந்த தியானமுமே காரணம் என்று பலரையும் அந்த அமைப்பில் சேர்த்துவிடுகிறான். தான் இப்போது சந்தோஷமாயிருப்பதாக அவனே கூறுகிறான்.

ஆனால் நீங்கள் யோகா, டாய் சி, தியானம்,இயற்கைஉணவுமுறை என்று மனிதனின் வாழ்வு வளத்திற்கும், தேக ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும், திருப்தியான குடும்பத்திற்கும், அதிக திறமைக்கும் உதவும் அமைப்புகள் அனைத்தையும் ஆன்மீகமே அல்ல என்றும், உண்மையில் மனிதனுக்கு உதவுபவை அல்ல என்றும், ஓஷோ சுட்டிக் காட்டுவது முற்றிலும் மாறுபட்டது என்றும் கூறுகிறீர்கள். அது எப்படி?” என்றார்.

“சரியான கேள்வி என்பது போலத்தான் தெரிகிறது அல்லவா,” என்று கூறிய நான், “ஓஷோவின் ஒரு பதில் எனக்கு ஞாபகம் வருகிறது. அதாவது ஒரு மனிதனுக்கு அவனது குடும்பம், சமூகம், நண்பர்கள், வீடு, சொத்து, பணம், வியாபாரம், எல்லாம் மறைந்து விட்டதாக வைத்துக் கொள்வோம். அதோடு செடி, பாறை, நதி என உள்ள இந்த உலகமும் மறைந்து விட்டது. வெளி உலகமே இல்லை. அவன் மட்டும் தன்னந் தனியாக இருக்கிறான். அப்போது அவன் மகிழ்ச்சியாக உணர்வானேயானால் அதுதான் உண்மையான மகிழ்ச்சி. ஆனந்தம். உண்மையான ஆன்மீகத்தில் பிறக்கும் அனுபவம்.
மற்றதெல்லாம் தவறே, போலியே, கெடுதலே என்கிறார்.

இப்போது உங்கள் நண்பரின் சந்தோஷம் என்பது என்ன? சமூகத்தில் நல்ல பெயர், மற்றவர்களை விட அதிக ஆயுள் வாழ்வோம் என்று வந்துள்ள நம்பிக்கை, தவறு செய்கிறோம் என்ற குற்றவுணர்வுலிருந்து விடுதலை, இப்படி மற்றவர்களை ஒப்பிட்டுப் பார்த்து கிடைக்கும் சந்தோஷம், தனது பேராசை நிறைவேறும் என்ற நம்பிக்கை, சமூக மதிப்பீட்டில் உயர்ந்துவிட்ட ஆணவம் இவைகளே அவரது சந்தோஷம். உள்ளிலிருந்து வந்திருப்பதல்ல இது.

இவர் கற்ற தியானமும், யோகமும், அவரை இந்த சமூகத்திற்குப் பொருத்தமானவனாக சமூகத்தையும், அதன் நம்பிக்கைகளையும், மதிப்பீடுகளையும் மதித்து கடைபிடிப்பவனாக, அதற்காக பெருமைப் படுபவனாகவே மாற்றியுள்ளன. ஆரோக்கியமான உடம்பு பெறுவதும் தன்னை சூழ்ந்துள்ளவர்களை விட நீண்ட ஆயுள் வாழும் பேராசையின் விளைவேயன்றி உடலைக் கொண்டாடி அனுபவப்படுவதற்கு அன்று”. என்றேன்.

“சரி சார். ஆனால் அவருக்கு இப்போது முன்பு போல கோபம் வருவதில்லையே. அது ஒரு உள் வளர்ச்சியில்லையா?” என்றார்.
“உங்கள் நண்பரை விசாரியுங்கள். கூர்ந்து கவனியுங்கள். ஆபீஸ் பையனோ, கூட்டும் பணியாளோ தவறு செய்தாலும் கோபப் படுவதில்லையா? அல்லது சமூகத்தில் சொல்வது போல் அனாவசியமாகக் கோபப் படுவதில்லையா?” என்றேன்.

“தப்பு செய்தால் கோபப்படத்தான் செய்வார், ஆனால் முன்போல அனாவசியமாகக் கோபப் படுவதில்லை.” என்றார்.

அப்படியானால் அவர் உள்ளே கோபம் அப்படியேதான் இருக்கிரது. அதை எப்படி கட்டுப்படுத்துவது, கையாளுவது என்பதையே உங்கள் தியானமும், யோகமும் கற்றுத் கொடுத்திருக்கின்றன.
இதைத் தான் ஓஷோ சொல்கிறார். எல்லா அமைப்புகளும் உன் திட்ட அமைப்பை, கட்டமைப்பை, கட்டுப்பாடுகளை, கோட்பாடுகளை, வரையறைகளை, அணுகுமுறைகளை, சுருக்கமாகக் கூறினால் உன் மனதை சமூகத்தின் மதிப்பீட்டுப்படி அதற்குப் பொருந்தும்படியாக, ஏற்றபடியாக, உயர்வும், பாராட்டும் கிடைக்கும்படியாக, திருப்தி கிடைக்கும்படியாக மாற்றி அமைப்பதையே செய்கின்றன. ஆகாதவற்றை நீக்கி, வைரஸ்களை களைந்து, ஓவர்ஆயில் செய்து, சமூகத்திற்குத் தகுந்தபடி வேலைசெய்யுமாறு மாற்றியமைத்துத் தருகின்றன.

ஆனால் ஆன்மீகம் என்பது உள்உணர்வுப்படி வாழ்வது!
உணர்வின் தெளிவில் வாழ்வது!
இயற்கையுணர்வில் ஐக்கியப்பட்டு வாழ்வது !
தன்னுணர்வோடு வாழ்வது.!

அப்படி வாழும் போது உடலில் பிறப்பது யோகாசனம், டாய் சீ.
இதயத்தில் பிறப்பது அன்பு, கருணை.
அறிவில் பிறப்பது கலை, விஞ்ஞான கண்டுபிடிப்புகள்.
ஆகவே ஓஷோவின் செயல்முறைகளும், தியானங்களும், சுட்டிக்காட்டுதல்களும் ஒருவரை உள்ளே மாற்றுவது.
உள்ஒளி தருவது.! மற்றவையெல்லாம் உன்னைக் குருடனாகவே வைத்திருந்து வழிகாட்டும், திறமையைக் கொடுக்கும், அமைப்புகளே.” என்றேன்.

ஒரு மரம் என்ன செய்கிறது?
கணத்துக்குக் கணம் வாழ்கிறது.
வாழ்வை முழுமையாக சந்திக்கிறது.
நேர்கொள்கிறது.
அப்படி வாழ்வின் எல்லாப் பருவங்களையும், காலங்களையும், பஞ்சபூதங்களையும், இந்த உலக நடப்புகளையும் நேர்கொண்டு
கணத்துக்குக் கணம் வாழும்போது அதன் வளர்ச்சி தானாய் நடக்கிறது. திடீரென துளிர்கள். ஒருநாள் மலர்கள்.
பின்பு கனி.

இது போலவே மனிதன் வாழ்வை தன்னிடமுள்ள தனித்தன்மையான தன்னுணர்வுடன் நேர்கொண்டு வாழும்போது வாழ்க்கை அவனை பக்குவப்படுத்தும். அப்படி வாழ்ந்து கிடைக்கும் கனியான அனுபவம் எதுவானாலும் அதுவே உண்மை. அதுவே சத்தியம். அதுவே மேன்மை. அதுவே அடைய வேண்டியது. அதுவே வாழ்வின் அர்த்தம். அதுவே வாழ்வின் பயன். அதுவே வாழும் வழி.

ஆகவே இயந்திரத்தனத்தை உடையுங்கள். இறந்தவனாய் இருக்காதீர்கள்.
அதைவிட விலங்காய் இருப்பது முற்றிலும் மேலானது. ஏன்? ஏனெனில் இயந்திரத்திற்கும், இறந்தவனுக்கும் உணர்வு இல்லை.
வாழ்க்கை இல்லை. உணர்வு நிலை வளர்ச்சி சாத்தியமில்லை.
ஆனால் விலங்காய் இருந்தாலும் வாழ்வின் அம்சமாய், உணர்வின் வெளிப்பாடாய் உள்ள நிலை அது. அங்கிருந்து தன்னுணர்வு பெற்ற வளர்ச்சியடைந்த உணர்வுநிலைதான் மனிதன். அப்படி மனிதனாய் மனித உணர்வுகளோடு வாழ்ந்த சிலர் அடைந்த உணர்வுநிலை உயர் அனுபவம்தான் புத்தா.

ஒரு நதி வரைபடத்தைப் பார்த்து வழி கண்டுபிடித்து கடலை அடைவதில்லை.
பறவைகள் கருவியால் இடம் கண்டு கூடுகட்ட வருவதில்லை.
இயற்கையோடு இணைந்திருக்கின்றன. அவ்வளவே. உணர்வுப்படி நடக்கின்றன. அவ்வளவே.
இயற்கை உணர்வை, பிரபஞ்சத்தொடர்பை விட்டுவிட்ட மனிதனை, இயந்திரமாகிவிட்ட மனிதனை, உணர்வுள்ள, தன்ணுணர்வோடு கூடிய மனிதனாக்குவதே முதலில் செய்ய வேண்டியது என்கிறார் ஓஷோ.

ஆகவேதான் ஆரம்ப காலங்களில் லட்சக்கணக்கானோர் முன் பேசிய ஓஷோ அவர்களை லட்சியம் செய்யாமல் வடிகட்டத் துவங்கினார்.

உணர்வோடு கூடிய மனிதர்களே எனக்குத் தேவை. பழைய மனிதனை, அவனது திட்ட அமைப்பை முன்னேற்றுவதோ, மாற்றுத் திட்டஅமைப்பு கொடுப்பதோ எனது வேலை அல்ல.
மாறாக அதைச் செய்யும் சாமியார்கள், மதங்கள், மதநூல்கள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், கடவுள்கள், அரசியல்வாதிகள், கோட்பாடுகள் எல்லாவற்றையும் நான் எதிர்க்கிறேன்.

மனித உணர்வோடு கூடியவர்கள் என்னுடன் வாருங்கள். ஒவ்வொருவரும் சுதந்திரத்தோடும், முழு உணர்வோடும், கிடைத்த வாழ்க்கையை வாழ்வோம். வளர்வோம், பக்குவமாவோம். இதுவே எனது அறைகூவல்.
இப்படி தனித்தன்மையோடும், தன்னுணர்வோடும் முழுசுதந்திரத்தோடும் வாழும் மனிதனே என் புதிய மனிதன். என் ஜோர் புத்தா. அப்படி மனிதன் வளரும்படியாக வாழும் சூழ்நிலையை உருவாக்குவதே என் கம்யூன் என்கிறார் ஓஷோ.

எனவே நமக்கு இறந்த சமூகம் வேண்டாம். உயிருள்ள கம்யூன் வேண்டும். அதை நோக்கி வழி நடப்போம். பெருமையுடன் வழங்குவது உங்கள் அன்பு ஜெய்தீப்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக