திங்கள், 5 ஏப்ரல், 2010

உள் நோக்கி திரும்புதல்

சாதாரணமாக சக்தி உன்னிடமிருந்து போகிறது – பொருட்களை நோக்கி, லட்சியங்களை நோக்கி போகிறது. சக்தி உன்னிடமிருந்து வெளியேறுவதால் நீ வெற்றிடமாக உணர்கிறாய். வெளியேறும் சக்தி திரும்ப வருவதேயில்லை. நீ சக்தியை வெளியே வீசிக் கொண்டேயிருக்கிறாய். மெதுமெதுவாக நீ முடமானவனாக, விரக்தியாக உணர்கிறாய். எதுவும் திரும்பி வருவதில்லை. மெதுமெதுவாக நீ வெறுமையாக உணர ஆரம்பிக்கிறாய். சக்தி ஒவ்வொரு நாளும் வழிந்தோடுகிறது. – பின் மரணம் வருகிறது. மரணம் என்பது உன்னிடமிருந்து சக்தி தீர்ந்து போய் விட்டது என்பதால் வருவது.

இதை புரிந்து கொண்டு சக்தியை உள்நோக்கி திருப்புவதுதான் வாழ்வின் மிகச் சிறந்த அற்புதம். அது உள்நோக்கி திரும்புதல். அது நீ இந்த உலகை விட்டு நீங்கி விடுவது என்பது கிடையாது. நீ இந்த உலகில்தான் வாழ்கிறாய். எதையும் விட்டுவிடவோ எங்கேயும் போகவேண்டியதோ அவசியமில்லை. நீ இந்த உலகில்தான் வாழ்கிறாய், ஆனால் முற்றிலும் வேறுபட்ட விதத்தில். நீ இந்த உலகில்தான் வாழ்கிறாய், ஆனால் நீ உன்னில் மையம் கொண்டிருக்கிறாய். உனது சக்தி உன்னிடமே திரும்புகிறது.

நீ வெளியேறுபவன் அல்ல. நீ உள் செல்பவன். நீ சக்தி சேகரமாக, சக்தி தேங்கியிருக்கும் இடமாக ஆகிவிடுவாய். சக்தி ஒளி விடுகிறது. சக்தி அங்கிருக்கிறது, வழிந்தோடுகிறது, நீ ஒளி விடுகிறாய். உன்னால் பகிர்ந்து கொள்ள முடியும், நீ அன்பாய் கொடுக்க முடியும். அதுதான் வித்தியாசம். நீ உன் சக்தியை பொறாமையில் செலுத்தினால், அது திரும்பி வராது. நீ உனது சக்தியை அன்பில் செலுத்தினால் அது ஆயிரம் மடங்காக திரும்ப வரும். நீ உனது சக்தியை கோபத்திற்கு கொடுத்தால் அது திரும்ப வராது. அது உன்னை காலியாக, வெறுமையாக ஆக்கி விடும். நீ உனது சக்தியை கருணைக்கு கொடுத்தால் அது ஆயிரம் மடங்காக திரும்ப வரும்.

எங்கே போனாலும், என்ன செய்தாலும் விழிப்புணர்வு என்ற உள் வெளிச்சத்தில் செய்.
இதுதான் தியானம் – அதிக கவனமாக இருப்பது. அதே வாழ்வை வாழ். உனது கவனத்தை மட்டும் மாற்றிக்கொள். அதை இன்னும் அதிக ஆழமானதாக செய். அதே உணவை சாப்பிடு, அதே பாதையில் நட, அதே வீட்டில் வாழு, அதே பெண்ணோடு, குழந்தைகளோடு இரு, ஆனால் உள்ளே முற்றிலும் வேறுவிதமாக இரு. கவனமாக இரு. அதே பாதையில் நட, ஆனால் விழிப்புணர்வோடு நட. நீ விழிப்படைந்துவிட்டால், திடீரென அந்த பாதை பழைய பாதையாக இருக்காது. ஏனெனில் நீ பழைய ஆளல்ல. நீ விழிப்படைந்துவிட்டால் அதே உணவு அதே போன்று இருக்காது. ஏனெனில் நீ அதே ஆளல்ல. உன் மனைவி அதே போன்று இருக்கமாட்டாள், ஏனெனில் நீ அதே ஆளல்ல. உனது உள் மாறுதலோடு எல்லாமும் மாறிவிடும்.

ஒருவர் உள்ளே மாறிவிட்டால் வெளியே சகலமும் மாறிவிடும். நீ ஆழ்ந்த இருளில் இருந்தால் உலகமும் இருளாக இருக்கும். நீ உனது உள் விளக்கை ஏற்றினால் திடீரென இந்த உலகம் மறைந்து விடும், அங்கு தெய்வீகம் மட்டுமே இருக்கும். இந்த முழு விஷயமும் நீ விழிப்புணர்வுடன் இருக்கிறாயா இல்லையா என்பதை பொறுத்தே அமைகிறது. இது ஒன்றுதான் மாற வேண்டியது, இதுதான் நிலை மாற்றம் அடைய வேண்டிய ஒன்று, புரட்சி என்ற ஒன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக