வியாழன், 22 ஏப்ரல், 2010

முரட்டுக்காளை.

ஒரு நாள் நடந்த கூட்டத்தில் சா'ன் ஆசிரியர் வேய்ஷான் "இன்னும் நூறு வருடத்தில், உங்களுடைய ஆசிரியர் காளை மாடாக இந்த பூமியில் பிறக்கப் போகிறார். அந்தக் காளையின் வலது பக்கத்தில் 'வேய்ஷான்' என்று எழுதி இருக்கும். கற்பனைக்கு அந்த சமயத்தில் யாரவது என்னை 'வேய்ஷான்' என்று அழைத்தால் மாட்டினை பெயர் சொல்லி அழைத்ததாகவே அர்த்தம். யாராவது மாடு என்று அழைத்தால் 'வேய்ஷான்' என்று கூப்பிடுவதாகவே அர்த்தம். இப்பொழுது சொல்லுங்கள் என்னை எப்படி அழைப்பது சரியாக இருக்கும்" என்று தன்னுடைய சீடர்களைப் பார்த்துக் கேட்டார்.

எங்கும் சத்தமே இல்லாமல் அமைதி நிரம்பியது. யாரும் பதில் கூறவில்லை. யாங் ஷான் என்ற சீடன் ஆசிரியர் முன்பு வந்து மண்டியிட்டு வணங்கினான், ஒரு வார்த்தையும் கூறாமல் திரும்பவும் தன்னுடைய இடத்திற்கு சென்று அமர்ந்து விட்டான்.
(எனது கருத்து:
தன்னொளி பெற்றவனுடைய மனதில் கற்பனையில் கூறப்பட்ட மாட்டிற்கும், நிஜமான வேய்ஷானுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தன்னொளி பெற்றவனுக்கு "நான்", "நீ" என்று பிரித்துப் பார்க்க வேண்டிய தேவை இல்லை. மனம் புத்த மனமாகிறது. வாழும் நிலம் புத்த நிலமாகிறது. எங்கும் எதிலும் புத்தனையே காண்கிறது.

ஆசிரியர் சீடர்கள் பிரித்துப் பார்க்கிறார்களா என்று சோதனை செய்து பார்க்க விரும்பினார். ஆனால் யாரும் பிரித்துப் பார்க்க வில்லை. யாங் ஷான் ஆசிரியரின் உள்ளார்ந்த அர்த்தத்தை புரிந்து கொண்டு அவருடைய சிறந்த சொற்பொழிவிற்கு நன்றி கூறி வணங்கி விட்டு தன்னிடத்தில் வந்து அமருகிறான். சில சமயங்களில் வார்த்தைகள் பொருளிழந்து விடுகின்றன. செய்யும் செயலே வார்த்தைகளுக்கும் மேலாக பொருளினை உணர்த்துகிறது. இந்தக் கதையில் தாங்கள் ஆசிரியர் கூறியதை புரிந்து கொண்டோம் என்பதனை நாசுக்காக அவரை வணங்கி சீடன் தெரிவிக்கிறான்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக