வியாழன், 22 ஏப்ரல், 2010

ஒரு விரல்.

ஊருக்கு ஒதுக்கு புரமாக தனிமைப் படுத்தப் பட்டு இருந்த ஒரு புத்த விஹாரத்தில் சூஷி என்ற துறவி தியானம் புரிந்து வந்தார். ஷிஷி என்ற பிக்ஷுனி (பெண் துறவி) அந்த விஹாரத்திற்கு வந்தாள். சூஷி இருந்த இடத்திற்கு எந்த அனுமதியும் கேட்காமல் தன்னுடைய கையில் தண்டத்துடனும் (கைத்தடி) தலையில் வைக்கோலினால் செய்யப் பட்ட தொப்பியினையும் அணிந்து கொண்டு சென்றாள். தியானத்தில் இருந்த சூஷியைப் பார்த்து "என்னுடைய தலையில் உள்ள தொப்பியை எடுக்க வேண்டுமானால், அதற்கு ஏதாவது ஒரு நல்ல காரணம் கூறு" என்றாள்.

எந்த பதிலும் வரவில்லை. மூன்று முறை அதேக் கேள்வியைத் தொடர்ந்து கேட்டாள். சூஷிக்கு பதில் சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால் என்ன பதில் சொல்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. எந்த பதிலும் வரததால் கோபமடைந்த ஷிஷி அந்த விஹாரத்திலிருந்து வெளியே புறப்படுவதற்கு ஆயத்தமானாள். சூஷி அவளைப் பார்த்து,"மிகவும் இருட்டாகிவிட்டது, இன்றிரவு நீ இங்கேயே தங்கி விட்டு செல்" என்று கூறினார். "நான் கேட்ட கேள்விக்கு பதில் கூறு, நான் இன்றிரவு இங்கேயே கழிக்கிறேன்" என்று பதில் கூறினாள் ஷிஷி. ஆனால் எந்த பதிலும் வரததால் விஹாரத்தை விட்டு புறப்பட்டு சென்று விட்டாள்.

ஆணாக இருந்தும் பிக்ஷுனி கேட்ட கேள்விக்கு பதில் தெரியவில்லையே என்று நொந்து கொண்ட சூஷி, "எனக்கு இன்னும் தகுந்த ஞானமோ தன்னொளியோ கிடைக்க வில்லை" என்று மனதிற்குள் வருந்தினான்.

கொஞ்ச நாட்கள் கழிந்ததும் சா'ன் ஆசிரியர் டி'யான் லூங் அந்த விஹாரத்திற்கு வந்தார். அவரிடம் சூஷி நடந்ததை எல்லாம் கூறி பதிலை எதிர் பார்த்தான். எந்த பதிலும் கூறாத ஆசிரியர் டி'யான் லூங் தன்னுடைய ஒரு விரலைத் தூக்கி மேலே காட்டினார். அந்த ஒரு விரலைப் பார்த்தவுடன் தன்னொளி பெற்றவன், அதிலிருந்து யார் எந்தக் கேள்வியைக் கேட்டாலும், ஒரு விரலைத் தூக்கிக் காட்டுவதையே வழக்கமாக கொண்டிருந்தான்.

பக்கத்து ஊரிலிருந்த சிறுவன் ஒருவனும் சூஷியைப் பற்றி கேள்வி பட்டான். அதிலிருந்து யார் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் தானும் ஒரு விரலை உயர்த்தி மேலே காண்பிக்க ஆரம்பித்தான். சூஷியைப் பார்க்க வந்த ஒருவர் அந்தப் பையனைப் பற்றிக் கூறி "உங்களைப் போலவே அந்த சிறுவனும் புத்தத்தன்மையினை அடைந்து விட்டான், எந்தக் கேள்விக்கும் ஒரு விரலை மேலே உயர்த்திக் காட்டியே பதில் கூறுகிறான்" என்று அந்தச் சிறுவனைப் பற்றி புகழ்ந்து கூறினார்.

தன்னுடைய விஹாரத்திற்கு சிறுவனை வரவழைத்த சூஷி, "ஊரில் உள்ள மக்கள் எல்லாரும் நீ புத்தத் தன்மையை அடைந்து விட்டதாக கூறுகிறார்கள், உண்மையா?" என்றுக் கேட்டார்.

"ஆமாம்" என்றான் சிறுவன்.
"அப்படியா, புத்தாவினைப் பற்றி என்ன நினைக்கிறாய்" என்று கேட்டார்.
எப்பொழுதும் போல தன்னுடைய கையின் ஒரு விரலை உயர்த்திச் சிறுவன் காண்பித்தான். கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஒரே வெட்டு வெட்டி அவனுடைய விரலினை தரையில் விழச் செய்தார் சூஷி.

அழுதுகொண்டே பையன் வேகமாக அங்கிருந்து ஓட ஆரம்பித்தான். ஆனால் சூஷி அவனைப் பார்த்து கர்ச்சிக்கும் குரலில் கத்தினார். நிற்க வைக்கும் கர்ச்சிக்கும் கத்தலினால் திரும்பி பார்த்த சிறுவனிடம், மறுபடியும் "புத்தாவைப் பற்றி என்ன நினைக்கிறாய்?" என்றார்.

எப்பொழுதும் போல தன்னுடைய ஒரு விரலினை உயர்த்திய சிறுவன் அங்கு தன்னுடைய விரலினைக் காணமல் கண்டவன், உண்மையான தன்னொளியினைப் பெற்றான்.
எனது கருத்து:

ஷிஷி பிக்ஷுனி விஹாரத்திற்கு வந்த போது "ஆண்", "பெண்" என்ற பால் பாகுபாடுடன் பார்க்கின்ற மனம் பக்குவப் படாத நிலையில் இருந்தார் சூஷி. அதனை சா'ன் ஆசிரியர் டி'யான் லூங் ஒரு விரலை உயர்த்திக் காட்டி இந்த வேறுபாட்டினை மனம் தான் உருவாக்கிறது. ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் ஒரு நிலையில் சிந்திப்பதே புத்தத் தன்மை என்று சுற்றிக் காட்டுகிறார். உண்மையான ஞானம் அனுபவத்தினால் தானே கிடைக்கிறது ஷிஷி பிக்ஷுனியின் வரவால் சூஷியின் அறியாமை அகன்று தன்னொளி பெறுகிறார்.

ஆனால் "எலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக" சிறுவன் உண்மையான புத்தத் தன்மை அடையாமல் ஆசிரியரைப் போல் ஒரு விரலினைப் தூக்கிக் காட்டி, பதிலாகக் கூறி தானும் தன்னொளி பெற்றவன் போல் பாசாங்கு செய்கிறான். அந்த பாசாங்கிலிருந்து விடுவித்து அவனுக்கு உண்மையான புத்தத்தன்மையைக் காட்டுவது ஆசிரியர் சூஷிவின் கடைமையாகிறது.

சிறுவனை வரவழைத்து "புத்தா என்றால் என்ன?" என்கிறார். சிறுவன் எப்பொழுதும் போல் ஒரு விரலைத் தூக்கிக் காட்டும் போது அதனை இரண்டு துண்டுகளாக்குகிறார். ஆனால் அதோடு விட்டு விடாமல் அங்கிருந்து தப்பியோடும் சிறுவனிடம் கர்ச்சிக்கும் குரலால் ஒடாமல் தடுத்து நிறுத்தி அவனுடைய மனதினை ஒரு நிலைப் படுத்தி "புத்தா என்றால் என்ன?" என்று மறுபடியும் கேட்கிறார்.

பழக்க தோஷத்தில் ஒரு விரலைத் தூக்கும் அவனுக்கு தன்னுடைய விரல் வெட்டுண்ட இடத்தில் ஒன்றுமில்லாததைக் காண்கிறான். "எல்லாம் ஒன்று" என்ற தத்துவத்திற்காக சொல்லப் பட்டதை முழுமையாக அனுபவப் பூர்வமாக உணர்கிறான் சிறுவன். ஒன்றும் இல்லாத வெற்றிடம் தானே ஸென், மனதில் இருக்கின்ற எண்ணச்சிதறல்களை ஒருமுகப் படுத்துவது தானே ஸென். இதுவரை புத்தனாக நடித்தவன் புத்தத்தன்மையுடன் கூடிய தன்னொளியினை நொடியில் அடைகிறான்.

தன்னொளி பெறுவதற்கு பல வருடங்கள் பிடிக்கும். முழுமையாக மடத்தில் சேர்ந்து தன் உடல், பொருள், ஆவி அனைத்தினையும் அர்பணிக்க வேண்டும். மடத்தில் சேர்ந்து தியானம் மற்றும் பிற பயிற்சிகளின் வழியாக தன்னொளி பெற முயலும் போது ஒருவன் மூளையை உபயோகப் படுத்துகிறான். மூளை வேலை செய்யும் இடத்தில் மனதின் உள்ளொளியை உண்மையாக புரிந்து கொள்வது கடினம். இந்தச் சிறுவன் எந்தப் பயிற்சியும் இல்லாமலேயே நொடியினில் அந்தத் தகுதியினை தன்னுடைய ஒரு விரலினை இழந்து பெறுகிறான். அனுபவமே சிறந்த பாடம் என்பதனை இந்தக் கதையின் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக