வியாழன், 22 ஏப்ரல், 2010

ஜாடிக்குள் வாத்து.

ஒரு சமயம் பெரிய பதவியில் இருந்த அதிகாரி லூ கென், சா'ன் ஆசிரியர் நான் சூவானைச் சந்திப்பதற்காக சென்றான். ஆசிரியரைப் பார்த்ததும் லூ கென், "முன்னொரு காலத்தில் தவத்தில் சிறந்து வாழ்ந்த ஒருவர் வாத்து குஞ்சு ஒன்றினை ஜாடிக்குள் வளர்த்தார். அந்த குஞ்சும் நன்றாக வளர்ந்து பெரிதானது. ஆனால் பெரிதாக வளர்ந்த வாத்தினை அவரால் ஜாடிக்குளிருந்து எப்படி வெளியே எடுப்பது என்று தெரியவில்லை" என்று கூறி நிறுத்திவிட்டு, ஆசிரியரை நோக்கி புன்முறுவலுடன் "ஜாடியினை உடைக்காமலும், வாத்திற்கு காயம் படாமலும் எப்படி வாத்தினை ஜாடிக்குள்ளிருந்து வெளியே வரவழைப்பது என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான்.

"ஓ! தலைவரே!" என்று கூறிய ஆசிரியர் நான் சூவான் திடிரென்று சத்தமாக அழ ஆரம்பித்து விட்டார்.
அதனைப் பார்த்த லூ கென் "இங்கே இருக்கிறேன்!" என்று சொல்லிக் கொண்டே கொஞ்சமும் தாமதிக்காமல் துள்ளி குதித்தார்.
துள்ளிக் குதித்த லூ கென்னை ஆச்சரியத்துடன் பார்த்து "நல்லது, வெளியே எடுத்தாகி விட்டது" என்றார் ஆசிரியர் நான் சூவான்.
ஓஷோவின் கருத்து:
மனது ஒரு சிறந்த சாதனம். அது இருப்பதை இல்லாததாக மாற்றிவிடும், இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்து கொள்ளும். மனதில் ஏதாவது ஒரு எண்ணம், சிந்தனை எப்பொழுதும் ஓடிக் கொண்டே இருக்கும். நில் என்று சொன்னாலும் நிக்காது. மனதிற்கு எப்பொழுதும் கடந்த காலத்தைப் பற்றி நினைப்பதிலோ, எதிர்காலத்தைப் பற்றி நினைப்பதிலோ மிகுந்த ஈடுபாடு இருக்கும். இப்பொழுது என்ன செய்கிறோமோ அதில் மனதினை இலயித்து திரம்பட செயவதென்பது அரிது. அதற்குதான் முன்னோர்கள் "மனோபலம்" வேண்டும் என்றார்களோ?

பொய்யான நிஜத்தில் நிகழாத ஒரு கற்பனைக் கதையினைக் கூறி வாத்தினை ஜாடியிலிருந்து எப்படி எடுப்பது என்று கேட்கிறான். ஆசிரியர் அவனுக்கு அங்கு ஜாடியும் இல்லை, அதன் மேல் மூடியும் இல்லை, வாத்தும் இல்லை என்பதனை புரிய வைக்க வேண்டும். அதற்காக பெரும் சத்தத்துடன் அழுகிறார். அந்த அழுகையானது லூ கென்னை மறைத்திருந்த மாயத்திரையை விலகச் செய்து, மனம் கற்பித்த பொய்யான மாய எண்ணத்திலிருந்து விடுபட வைக்கிறது. சா'னில் இரண்டறக் கலந்த ஒருவனுக்கு இயற்கையையும், தன்னையும் வேறு வேறாக பார்ப்பதில்லை. இரண்டையும் ஒன்றாகவே பார்க்கிறான். இயற்கையோடு இரண்டறக் கலக்கிறான்.

ஆசிரியர் அழுத பெரும் சத்தம் மற்ற எல்லா சிந்தனைகளையும் முடக்கிப் போடுகிறது. அதன் பொருளை உணர்ந்தவன், எதனையும் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை என்பதனை உணர்ந்த போது, ஜாடிக்குள் வெளியே வந்த வாத்தைப் போல் இருந்தவன் வெளியே வந்து விட்டேன் என்பதனை "இங்கே இருக்கிறேன்!" என்று கூறி ஆசிரியருக்கு உணர்த்துகிறான். அவனுடைய மாயத் திரை விலகியதை அறிந்த ஆசிரியரும் "நல்லது, வெளியே எடுத்தாகி விட்டது" என்று கூறி ஆச்சரியத்துடன் ஆனந்தமாகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக